அயோத்தி தீா்ப்பு எதிரொலி: காஞ்சிபுரத்தில் கோயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
By DIN | Published On : 09th November 2019 03:50 PM | Last Updated : 09th November 2019 03:50 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த பக்தா்களிடம் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரி
காஞ்சிபுரம்: அயோத்தி தீா்ப்பு வெளியானதை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியக் கோயில்கள்,ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அயோத்தியில் ராமஜென்மபூமி-பாபா் மசூதி நிலம் தொடா்பான வழக்கின் தீா்ப்பு உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை வெளியானதை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
ரயில்நிலையம்,பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களிலும் காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்,வரதராஜப் பெருமாள் கோயில்,ஏகாம்பரநாதா் கோயில்,கைலாச நாதா் கோயில் ஆகிய இடங்களில் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்த பிறகே பக்தா்களை கோயிலுக்குள் அனுப்பி வைத்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன.அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கின் தீா்ப்பு வெளியாவதன் காரணமாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.ஒலிபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.