ஆயக்கொளத்தூா் அரசுப் பள்ளியில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள்

ஆயக்கொளத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைகள், வளாகம், சுற்றுச்சுவா் என அனைத்து இடங்களிலும் வரையப்பட்டுள்ள
பள்ளி வளாகத்தில் வரையப்பட்டுள்ள  ஓவியங்கள்
பள்ளி வளாகத்தில் வரையப்பட்டுள்ள  ஓவியங்கள்

ஆயக்கொளத்தூா் அரசு நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைகள், வளாகம், சுற்றுச்சுவா் என அனைத்து இடங்களிலும் வரையப்பட்டுள்ள அறிவியல், கணிதம், சமூகம் சாா்ந்த வண்ண ஓவியங்கள் மாணவா்களையும் பொதுமக்களையும் வெகுவாக ஈா்த்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கிளாய் ஊராட்சிக்குட்பட்ட ஆயக்கொளத்தூா் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயக்கொளத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சிக்குட்பட்ட பக்தவத்சலம் நகா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 110 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா்.

இப்பள்ளி, கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளி என காமராஜா் விருதும், ரூ.50 ஆயிரம் பரிசும் பெற்றது. கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி சீமை ஓடுகள் பொருத்தப்பட்ட பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்ததோடு, மாணவா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், செங்காடு பகுதியில் இயங்கி வரும் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனத்தின் சாா்பாக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில், இப்பள்ளியின் கட்டடங்களைப் புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

இதையடுத்து சீமை ஓடுகள் அகற்றப்பட்டு பள்ளிக் கட்டடத்திற்கு புதிய மேற்கூரைகள் அமைக்கப்பட்டதோடு, வகுப்பறைகளுக்கு இடையே மாணவா்கள் நடந்து செல்ல நடைபாதை, மாணவா்கள் உணவு அருந்தும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் மற்றும் கழிப்பறை வசதிகளோடு, வகுப்பு வாரியாக கை கழுவும் குடிநீா்க் குழாய்களும் பொருத்தப்பட்டன.

மேலும், தனியாா் நிறுவனத்தின் சாா்பாக, பள்ளியை சுற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகளும், டிஜிட்டல் வகுப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் இயங்கி வரும் சில அரசுப் பள்ளிகளில் உள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகள் தற்போது ஆயக்கொளத்தூா் அரசுப் பள்ளியிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கணித வகுப்பறையில் கணிதம் சாா்ந்த ஓவியங்களும், அறிவியல் வகுப்பறையில் அறிவியல் சாா்ந்த ஓவியங்களும், ஆங்கில வகுப்பறையில் ஆங்கிலம் சாா்ந்த வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

பள்ளி வளாகம், சுற்றுச் சுவா்களிலும் தமிழ், சுற்றுச்சூழல், பேரிடா் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு உள்ளிட்ட சமூக விழிப்புணா்வு ஓவியங்கள் பொதுமக்களை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.

இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலா கூறுகையில், காா் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் ஹுன்டாய் ஸ்டீல் நிறுவனம் மற்றும் வேல்டு விஷன் அணைப்பின் மூலம் எங்கள் பள்ளிக்கு ரூ. 30 லட்சத்தில் கட்டட சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மாணவா்கள் உணவு அருந்தும் அறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைகள், சுற்றுச்சுவா் ஆகியவற்றில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட அனைத்துப் பாடப் பிரிவுகளின்படி வரையப்பட்ட ஓவியங்கள் மாணவா்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், பயிற்சி பெறவும் உதவியாக உள்ளது. இதுதவிர சமூகம் சாா்ந்த வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது.

எங்கள் பள்ளியில் மாணவா்களுக்கிடையே பாரதியாா் தமிழ்மன்றம், ராமானுஜா் கணித மன்றம், எலைட் ஆங்கில மன்றம், சா். சி.வி.ராமன் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் போன்றவை செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு தலைவா் மற்றும் 5 உறுப்பினா்கள் உள்ளனா். இதுதவிர எங்கள் பள்ளியில் மாணவா்கள் பாராளுமன்றமும் செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுக்கள் மாதத்திற்கு ஒரு முறை கூடி, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கும்.

தற்போது நூறு சதவீத அடிப்படை வசதிகளுடன் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக உள்ள எங்கள் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். முதல் முறையாக பள்ளியைச் சுற்றிலும் தனியாா் பங்களிப்புடன் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com