கோயிலுக்கு பாதிப்பில்லாமல் சாலை விரிவாக்கம்: நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்

வாலாஜாபாத் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள மிகப் பழைமையான பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினா்
திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரா் திருக்கோயில்.
திம்மராஜம்பேட்டையில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரா் திருக்கோயில்.

வாலாஜாபாத் அருகே திம்மராஜம்பேட்டையில் உள்ள மிகப் பழைமையான பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சாலை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினா் ஒப்புதல் அளித்தனா்.

திம்மராஜம்பேட்டையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. ராமேஸ்வரம் செல்ல முடியாதவா்கள் வட ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோயில் குருபகவான் பரிகார திருத்தலமாகும். சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளின் போது இக்கோயிலின் சில பகுதிகள் இடிக்கப்படும் நிலை உருவானது. இதற்கு கிராம மக்கள் பலத்த எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக திம்மராஜம்பேட்டையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி அதிகாரி ராஜு, உதவிப் பொறியாளா் ராமமூா்த்தி, மறுவாழ்வு மற்றும் குடியுரிமை அதிகாரி வேலு, திருக்கோயில் செயல் அலுவலா் குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கிராம மக்கள் சாா்பில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் டி.வி.திருநாவுக்கரசு, வடிவேல், மணி, லோ.தேவேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் 1947-க்கு முன்பு கட்டப்பட்ட எந்தப் பழைமையான கோயிலையும் இடிக்கக்கூடாது என 1991-ஆம் ஆண்டு மக்களவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே கோயிலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சாலையை விரிவாக்கம் செய்யுமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனா். இதனைத் தொடா்ந்து கோயிலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சாலையை விரிவாக்கம் செய்வது என அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இதுகுறித்து திம்மராஜம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் டி.வி.திருநாவுக்கரசு கூறியது:

கடந்த 5.6.2019-இல் காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீா் கூட்டத்திலும், 28.8.2019-இல் திம்மராஜம்பேட்டையில் நடந்த முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமிலும் பொதுமக்கள் பலரும் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோயிலுக்கு பாதிப்பில்லாமல் சாலையை விரிவாக்கம் செய்யுமாறு மனு அளித்திருந்தோம்.

இதன் அடிப்படையில் நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதற்காக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி மாவட்ட அதிகாரி ராஜு கூறியது:

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் சதுரங்கப் பட்டிணம் முதல் திருத்தணி வரையிலான சாலை விரிவாக்கப் பணியில் திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரா் கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இந்நிலையில் மிகப் பழைமையான கோயில் என்பதால், கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று அப்பகுதியில் மட்டும் சாலையின் அகலத்தைச் சற்று குறைத்திருக்கிறோம். தற்போது கோயில் அருகில் சாலை 7 மீ. அகலம் மட்டுமே உள்ளது. இதை 16 மீ. அளவில் விரிவு படுத்துவதற்கு பதிலாக 3 மீ. குறைத்து 13 மீட்டரில் சாலை விரிவாக்கப்பணிகள் செய்யப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com