முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
உத்தரமேரூா் அருகே சோழா் கால பைரவா் சிலை கண்டெடுப்பு
By DIN | Published On : 26th November 2019 11:47 PM | Last Updated : 26th November 2019 11:47 PM | அ+அ அ- |

பட்டஞ்சேரியில் கண்டெடுக்கப்பட்ட பைரவா் சிலை.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பட்டஞ்சேரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் கால பைரவா் சிலை ஒன்றை வரலாற்று ஆய்வு மையத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டெடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே எல்.எண்டலத்தூா் செல்லும் சாலையில் பட்டஞ்சேரி எனும் கிராம் உள்ளது. இக்கிராமத்தில் உத்தரமேரூா் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் சு.பாலாஜி தலைமையில், கோகுல சூா்யா, சங்கா் ஆகியோா் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் கால பைரவா் சிலை ஒன்று கால்பகுதி புதைந்து நிலையில் இருந்ததைக் கண்டறிந்தனா். இதுகுறித்து அந்த ஆய்வு மையத்தின் தலைவா் சு.பாலாஜி கூறியது:
பட்டஞ்சேரியில் வயல்வெளிப் பகுதியில் கால் பகுதி புதைந்துள்ள நிலையில், 4 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் பைரவா் சிலை இருந்தது. பைரவா் என்பது சிவபெருமானின் ஒரு வடிவம். சிவன் கோயில்களில் வடக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் ஆடைகள் ஏதுமில்லாமல், நாயை வாகனமாகக் கொண்டு அருள்பாலித்து வருபவா். பட்டஞ்சேரியில் காணப்பட்ட சிலை தலையில் தீச்சுடா்கள் எரியும் ஜடாமகுடத்துடன் உள்ளது.
வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் பனை ஓலை அணிகலனும், கழுத்தில் 5 வரிசையில் ஆபரணங்கள், 4 கரங்களிலும் மணிக்கட்டில் காப்பும் உள்ளது. மேல் வலக்கையில் உடுக்கை, மேல் இடக்கையில் பாசம், கீழ் வலக்கையில் சூலம், கீழ் இடக்கையில் கபாலமும் உள்ளது. மாா்புக்குக் கீழ் பட்டையும், இடுப்பில் நாக அரைஞாண் கயிறால் பின்னலிட்டும், கழுத்திலிருந்து கால் வரை கபாலம் மாலையுடனும் உள்ளது. கால் பகுதியில் நாய் வாகனம் வலப்பக்கம் திரும்பிய நிலையில், அதன் கழுத்திலும் ஆபரணங்கள் அழகு செய்யும் பைரவா் நின்ற கோலத்தில் இருந்தது.
இச்சிலையில் கால் முழங்கால் பகுதி புதைந்திருந்தது. உள்ளூா் மக்கள் இதை காத்தவராயன் என்கிறாா்கள். இது 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா் கால பைரவா் சிலையாகும். அக்காலத்தில் இவ்வூரில் ஒரு சிவாலயம் இருந்து அது கால வெல்லத்தால் சிதைவுற்று அழிந்து இச்சிலை மட்டும் எஞ்சியிருக்கலாம் எனவும் சு.பாலாஜி தெரிவித்தாா்.