வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் மங்களாசாசனம்

தூப்புல் வேதாந்த தேசிகர் கோயில் வார்ஷிக மகோற்சவத்தையொட்டி, தேசிகர் தங்கப் பல்லக்கில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி
வரதராஜப் பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் மங்களாசாசனம்


தூப்புல் வேதாந்த தேசிகர் கோயில் வார்ஷிக மகோற்சவத்தையொட்டி, தேசிகர் தங்கப் பல்லக்கில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 காஞ்சிபுரம்  தூப்புல்  வேதாந்த  தேசிகர் சுவாமிகள் கோயிலில் வார்ஷிக மஹோற்சவம் கடந்த  செப்டம்பர் 29-ஆம்  தேதி தொடங்கியது.விழாவை முன்னிட்டு தேசிகன் தினசரி காலையில் தங்கப் பல்லக்கில் வீதியுலாவும், இதனைத் தொடர்ந்து, கோயிலில் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது. தினசரி மாலையில் உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். அக். 5-ஆம் நாள் தேரோட்டமும், இரவு ராமர் திருக்கோலத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை தேசிகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி, விளக்கொளி பெருமாள் கோயிலில் முதலில் மங்களாசாசனம் செய்தார். 
பின்னர், அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினார். வாண வேடிக்கைகள், மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க வேதாந்த தேசிகன் தங்கப் பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் மங்களாசாசனம் நடைபெற்றது.
 இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை மாலை பெருமாள் அத்திமலையிலிருந்து இறங்கி வந்து, தேசிகருக்கு காட்சியளித்தலும் மங்களாசாஸன நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜர் அருள்பாலித்தார். மங்களாசாஸன நிகழ்ச்சிக்குப் பிறகு, தேசிகர் பூப்பல்லக்கில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து, சந்நிதியை அடைந்தார்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் செயல் அலுவலர் ஏ.சரவணன் மற்றும் விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் ஸ்ரவணம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com