ஏரி பாசனக் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

 ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து விளைநிலங்களுக்குச் செல்லும் பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
ஏரி பாசனக் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை


 ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து விளைநிலங்களுக்குச் செல்லும் பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஸ்ரீபெரும்புதூர் ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த ஏரி நீரை பயன்படுத்தித்தான்  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்துள்ளது. 
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் விவசாய நிலங்களும் குறைந்து போனது. இருந்த போதிலும் ஸ்ரீபெரும்புதூர் ஏரி நீரை பயன்படுத்தி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தற்போதும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
  
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து பிரதான நீர்வரத்துக் கால்வாய் டி.கே.நாயுடு நகர், பாரதி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் வழியாக விவசாய நிலங்களுக்குச் செல்கிறது. 
சுமார் 30 அடி அகலமுள்ள பாசனக் கால்வாய்  முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏரி நீர் விவசாய நிலங்களுக்குச் செல்வது தடைபட்டுள்ளது.
இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். 
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மார்க்கண்டன் கூறியது: பாசனக் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது உண்மைதான். இதனை சீரமைக்க பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தருமாறு கடந்த ஜனவரி மாதமே பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றித் தந்தால் கால்வாய் சீரமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com