சங்கர மடம் சார்பில் திண்ணைப் பள்ளிக்கூடம் திறப்பு

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் இந்திய பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாசாரக் கல்வியைப் பயிற்றுவிக்கும் திண்ணைப் பள்ளிக்கூடம்
சங்கர மடம் சார்பில் திண்ணைப் பள்ளிக்கூடம் திறப்பு


காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் இந்திய பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாசாரக் கல்வியைப் பயிற்றுவிக்கும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பிள்ளைப்பாக்கத்தில் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற சிறார்களுக்கு இந்திய பாரம்பரியக் கலைகள் மற்றும் கலாசாரக் கல்வியை வழங்கும் உயர்ந்த நோக்கத்துடன் பிள்ளைப்பாக்கம் கிராமம் ஐயங்கார் தெருவில் உள்ள கட்டடத்தில் திண்ணைப்பள்ளிக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஸ்ரீசங்கரா கல்லூரி முதல்வர் கலை.ராம.வெங்கடேசன் தலைமை வகித்து பள்ளியைத் தொடங்கி வைத்தார்.
சௌமியா ராமானுஜம், பிள்ளைப்பாக்கம் அரசுப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஏழுமலை, கடுவஞ்சேரி அரசுப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ரதி பாய், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். 
விழாவில் கட்டட உரிமையாளரும், சமூக சேவகருமான பி.பி.கௌசிக் காஞ்சி மடத்தின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்களை வழங்கினார்.
காஞ்சிபுரம் ரோட்டரி சங்கச் செயலர் வி.கே.ஜெயகரன் பல் மருத்துவம் குறித்துப் பேசினார். ஆசிரியர் உண்ணாமலை மாணவர்களுக்கு நீதிக்கதைகளைக் கூறினார்.
ஏ.மணிகண்டன் மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தார். முதல் முதலாக தொடங்கிய திண்ணைப் பள்ளிக்கூடத்தில்  கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில் ஸ்ரீ சங்கரா கல்லூரி முதல்வர் கலை.ராம.வெங்கடேசன் பேசியது:    
இப் பாடசாலை, விடுமுறை நாள்களில் வாரம் ஒருமுறை இயங்கும். பெற்றோரின் விருப்பத்துடன் இதில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மனம், உடல், சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள், யோகா போன்ற உடற்பயிற்சிகள், பாரம்பரிய இசை முதலான கலைகள், நாட்டுப்புறக் கலைகள், திருக்குறள் முதலான நீதி இலக்கியங்கள், சிறார் பாடல்கள், நீதிக் கதைகள், மனக்கணக்குகள், நாடகம், படைப்பாற்றல் வெளிப்பாடு முதலானவை சொல்லித்தரப்படும்.  
அக்காலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பல திறன்களும் பெற்ற பல மேதைகள் உருவானதுபோல, கிராமப்புற மாணவர்கள் பல திறன்களோடு உருவாகி வருவதை ஊக்கப்படுத்துவதற்காக இப்பாடசாலை  செயல்படும். 
வாரந்தோறும் வெவ்வேறு ஆளுமைகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், வல்லுநர்கள் இப்பாடசாலையில்  பாடங்களை நடத்தவுள்ளனர் என்றார். ஸ்ரீதர்ராஜன் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com