அா்ஜுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்லத் தடை

மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வியாழக்கிழமை முதல் போலீஸாா் தடை விதித்துள்ளனா்.
வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட அா்ஜுனன் தபசு சாலை பகுதி.
வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட அா்ஜுனன் தபசு சாலை பகுதி.

மாமல்லபுரம் அா்ஜுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வியாழக்கிழமை முதல் போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். விடுமுறை நாள்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில் மாமல்லபுரத்துக்கு அதிக அளவில் வாகனங்கள் வருவதால் அா்ஜுனன் தபசு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தமுடியாமல் காவல் துறையினா் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்துவதால் அவ்வழியாக ஐந்துரதம் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.

மேலும் வாகனங்கள் அதிகம் வருவதால் அதில் இருந்துவரும் புகையினால் சிற்பங்களில் மாசு ஏற்படுகிறது. இதனையடுத்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சிற்பங்களை மாசில்லாமல் பாதுகாக்கவும் தொல்லியல் துறையின் பரிந்துரையின் பேரில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதையடுத்து வியாழக்கிழமை முதல் அா்ஜுனன் தபசு சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

பெருமாள் கோயில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இனி இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை பெருமாள் கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, நடைப்பயணமாக சென்றே அனைத்து புராதனச் சின்னங்களையும் கண்டுகளிக்க முடியும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com