மாமல்லபுரம் புராதனச் சின்னங்களை இரவு 9 வரை பார்வையிட அனுமதி

மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை மின்விளக்கு ஒளியில் பார்த்து ரசிக்கும் வகையில் இரவு 9 மணிவரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை முதல் தொல்லியல் துறை அனுமதியளித்துள்ளது. 
மின்விளக்கொளியில் வெண்ணெய்   உருண்டைப்பாறையை ரசிக்கும்  சுற்றுலாப்  பயணிகள்.
மின்விளக்கொளியில் வெண்ணெய்   உருண்டைப்பாறையை ரசிக்கும்  சுற்றுலாப்  பயணிகள்.


மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை மின்விளக்கு ஒளியில் பார்த்து ரசிக்கும் வகையில் இரவு 9 மணிவரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை முதல் தொல்லியல் துறை அனுமதியளித்துள்ளது. 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பதை முன்னிட்டு மாமல்லபுரம் நகரம் அழகு படுத்தப்பட்டு, புராதனச் சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டன. 
ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டைப்பாறை, கணேச ரதம், கிருஷ்ண மண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம்  உள்ளிட்ட பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. 
இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு கடந்த அக். 11, 12-இல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அக்.13-ஆம் தேதி அன்றே மின்விளக்குகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 


இந்நிலையில், இரவில் மின்விளக்கு ஒளியில் புராதனச் சின்னங்களைப்  பார்வையிட ஆர்வமாக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மின் விளக்கொளியில் புராதனச் சின்னங்களைக் காண அனுமதிக்க வேண்டும் என அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனர். 
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (அக்.21) முதல் இரவு 9 மணி வரை தினமும் மின்விளக்கு வெளிச்சத்தில் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை அறிவித்தது. 
இதுகுறித்து, தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலர் சரவணன் கூறியது: 
இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே புராதனச்சின்னங்களை கண்டு களிக்க  சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இனி இரவு 9 மணி வரை கூடுதலாக 3 மணிநேரம்  மின்விளக்கு வெளிச்சத்தில் கலைச்சிற்பங்களை கண்டு களிக்கலாம். 
கடந்த 2018-ஆம் ஆண்டு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 25 லட்சம்பேரும்  வெளிநாட்டுப் பயணிகள் 1 லட்சம் பேரும் வருகை தந்தனர். இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டதாலும், இருநாட்டுத் தலைவர்கள் வருகை தந்துள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. 
இனி கடற்கரைக் கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைப்பாறை ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் இரவு 9 மணி வரை கட்டணம் செலுத்தி புராதனச் சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கலாம்  என்றார்.
இனி இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com