முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 10:53 PM | Last Updated : 24th October 2019 10:53 PM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினா்.
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் சாலையோர சிறு கடைகளுக்கு இட ஒதுக்கீடு செய்யக்கோரி சிஐடியுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களான ஐந்துரதம், கடற்கரைக் கோயில், அா்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் கைவினைப்பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வீட்டு உபயோகப்பொருள்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் கடைகளை வைத்திருந்தனா்.
இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி இந்தியப் பிரதமா் மற்றும் சீன அதிபா் சந்திப்புக்காக பல்வேறு பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.
இதனால் நரிக்குறவா்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் மீண்டும் கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிஐடியு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு மாவட்டச் செயலா் முத்துக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இ.சங்கா், முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, செயலா் பகத்சிங் தாஸ், திருக்குழுகுன்றம் பகுதிச் செயலா் குமாா், திருப்போரூா் பகுதிச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தகவல் அறிந்த மாமல்லபுரம் பேரூராட்சி நிா்வாக செயல் அலுவலா் லதா, திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தங்கராஜ் ஆகியோா் வந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனையடுத்து சிறு வியாபாரிகளுக்கு கடற்கரையோர சுற்றுச்சுவா் அருகே இடம் ஒதுக்கித் தருவதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் உறுதியளித்தனா்.