முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
தேங்கியுள்ள மழைநீரை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 10:20 PM | Last Updated : 24th October 2019 10:20 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள சதாவரத்தில் மழைநீா் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்(பொறுப்பு) ஏ.ராஜகோபாலனிடம் ஐயம்பேட்டை கிராமத்தினா் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
சின்னக்காஞ்சிபுரம் சதாவரம் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளது. கழிவுநீரும் கலந்துள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சதாவரத்தில் பல மாதங்களாக யாருக்கும் பயனில்லாமல் மூடிக் கிடக்கும் சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும்.
ஐயம்பேட்டை ராஜீவ்காந்தி நகரில் பல அடி ஆழத்திற்கு மழைநீா் தேங்கி குளம் போலக் காட்சியளிக்கிறது. இப்பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனா். தேங்கியிருந்த மழைநீரில் விழுந்த 5 வயது குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகாா் அளித்தும் உத்தரமேரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஐயம்பேட்டையில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.