விநாயகர் சதுர்த்தி: கடைவீதிகளில் குவிந்த மக்கள்
By DIN | Published On : 02nd September 2019 06:00 AM | Last Updated : 02nd September 2019 06:00 AM | அ+அ அ- |

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் திருக்காலிமேடு வீர சிவாஜி தெருவில் வசிக்கும் இளைஞர்கள் 16 அடி உயரத்தில் பழங்கள் மற்றும் நவதானியங்களால் விநாயகர் சிலையை உருவாக்கி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகளை செய்யவுள்ளனர்.
இதுகுறித்து வி.எஸ்.எஸ்.காய்ஸ் என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளான அருணகிரி, வேலு ஆகியோர் கூறியது:
இந்த ஆண்டு புதுமையாக விநாயகர் சிலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் நீர்நிலைகளுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு அமைக்க முடிவு செய்தோம்.
அதன்படி நண்பர்கள் தில்லிபாபு, தினேஷ் ஆகியோரது ஆலோசனையின் படி, 16 அடி உயரத்தில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளோம். பழங்கள் மற்றும் நவதானியங்களால் கடந்த 10 நாள்களாக விநாயகர் சிலையை உருவாக்கி வழிபாட்டுக்கு வைத்துள்ளோம்.
பந்தல் செலவு, வழிபாட்டுச் செலவு, புதுமையான விநாயகரை அமைக்க பழங்கள் மற்றும் நவதானியங்கள் வாங்கிய செலவு அனைத்தையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவாகியுள்ளது.
இந்த விநாயகர் சிலையில் சோளம் 1,000, கம்பு 1,600, ஆப்பிள் 200, சாத்துக்குடி 200, மாதுளை 150, கொய்யா 100, கரும்பு 75 ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளோம்.
திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு தீபாராதனைகள் நடத்தி முடிந்தவுடன் இதில் உள்ள பழங்களையும், நவதானியங்களையும் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுத்து விடுவது என முடிவு செய்திருக்கிறோம் என்றனர்.
குடைகள், பூஜைப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்திசாலையில் உள்ள தேரடி அருகிலும், காமராஜர் சிலை அருகிலும் ஏராளமானோர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்குத் தேவையான பூஜைப் பொருள்களை விற்று வருகின்றனர்.
விநாயகருக்கு வைக்கப்படும் குடையை பல வண்ணங்களில் வடிவமைத்து விற்பனைக்கு வைத்திருந்தது பலரையும் கவர்ந்தது.
விநாயகர் குடை குறைந்தபட்சம் ரூ. 20 முதல் அதிக பட்சம் ரூ. 800 வரை விற்பனையானது.
குடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், சென்னையில் குடை தயாரிப்புக்குத் தேவையான பொருள்களை தனித்தனியாக பேக்கிங் செய்து விற்கிறார்கள்.
ஒரு குடைக்கான பொருள்களை ரூ.13-க்கு வாங்கி வந்து அவற்றை ஒன்று சேர்த்து குடையாக மாற்றி ரூ.20-க்கு விற்பனை செய்கிறோம்.
பெரியகுடைகளை உருவாக்க மூலதனமும் அதிகம் தேவை. அதில் வேலைப்பாடுகளும் அதிகம், விலையும் அதிகம் என்றார்.
பூக்கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், சாதாரண நாள்களில் மல்லிகையின் விலை ஒரு கிலோ ரூ.500 ரூபாயாக இருந்தது. இப்போது ரூ.1500 ஆக உயர்ந்துள்ளது. பூக்களின் கொள்முதல் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், நாங்களும் அதிக விலைக்கு விற்கவேண்டியுள்ளது என்றார்.
பொரி, கடலை, அவல், வெல்லம் அனைத்தும் கலந்த ஒரு சிறிய பாக்கெட் ரூ. 50-க்கு விற்பனையானது. களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் ரூ.60 முதல் ரூ.150 வரை விற்பனையானது.
பெரும்பாலான பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
திருவள்ளூரில்..
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகள், பூஜைப் பொருள்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
விநாயகர் சதுர்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 1,134 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் திருவள்ளூர் பகுதிகளில் காக்களூர், திருப்பாச்சூர், பட்டரைபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டன.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாவு பொருள்களால் 6 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தங்களது பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். பெரிய அளவிலான சிலைகளைவாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
திருவள்ளூர்-திருத்தணி, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை-செங்குன்றம், பூந்தமல்லி உள்ளிட்ட சாலையில் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்ல ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸார் விரைந்து செயல்பட்டு சீரமைத்தனர்.
பூஜை பொருள்கள் விலை அதிகரிப்பு: விநாயகர் சதுர்த்திக்கான பூஜை பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. மற்ற நாள்களில் ஒரு கிலோ ரோஜா பூ-ரூ. 50-க்கும், மல்லி-ரூ.190-க்கும், சாமந்திப்பூ-ரூ.160-க்கும், மாலை ரூ.350-க்கும், பெரிய அளவிலான மாலை-ரூ.700-க்கும் விற்பனையாகும்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, சாமந்திப்பூ மற்றும் மாலை வகைகளின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல், ஆப்பிள், விளாங்காய், மக்காச்சோளம், கரும்பு, கொய்யா மற்றும் பூஜைப் பொருள்கள் அடங்கிய பை ரூ.150-க்கும், வாழை இலை ரூ. 20-க்கும் விற்பனையானது.
ஊத்துக்கோட்டையில்...
ஊத்துக்கோட்டை பஜார் தெருவில் பழங்கள், பூஜை பொருள்கள், இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசல் காரணமாக பஜார் தெரு சாலையில் கனரக வாகனங்கள் ஒருவழிப் பாதையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் திருவள்ளூர் சாலையில் திருப்பிவிடப்பட்டன. ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 248 விநாயகர் சிலைகளை வைக்க போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
செங்கல்பட்டில்...
இதேபோல், செங்கல்பட்டு ராஜாஜி சாலை, மேட்டுத்தெரு மற்றும் பஜார் வீதி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜைக்கான பொருள்கள், பொரி, கடலை, வெல்லம், கரும்பு, சோளக்கதிர் மற்றும் பல வகைப் பழங்களை விற்பனை செய்வதில் சிறுவியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர். மார்க்கெட் பகுதியில் விநாயகர் குடை விற்பனையில் நரிக்குரவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர்.
விலை அதிகமாக இருந்தாலும், சீசன் விற்பனை என்பதால் பொதுமக்கள் பேரம் பேச முடியாமல் பொருள்களை வாங்கிச் சென்றனர்.