Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி: மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவா- Dinamani

சுடச்சுட

  

  தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி: மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நனவாக்க உரமூட்டும் ஆசிரியர்கள்

  By சி.வ.சு.ஜெகஜோதி  |   Published on : 09th September 2019 10:40 AM  |   அ+அ அ-   |    |  

  velur1

  "நீ என்னவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்' என்ற சுவாமி விவேகானந்தரின் கூற்று. 
  "தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னைத் தூங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
  அந்த வகையில் தொடக்கப்பள்ளியில் இருந்தே ஒவ்வொரு மாணவரின் எதிர்காலக் குறிக்கோள் என்னவென்று கேட்டு அதன்படியே அம்மாணவர்களை அமைச்சர், அதிகாரி,  பேராசிரியர், மருத்துவர் என்பது போன்ற அடைமொழியுடன் தினமும் வருகைப் பதிவின்போது அழைத்து ஊக்கப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது காஞ்சிபுரம் அருகேயுள்ள திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
  இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1908-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 111 ஆண்டுகளைக் கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு மொத்தம் 350 மாணவர்கள் படிக்கின்றனர்.  தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றும் இப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
  கடந்த ஆண்டு  அரசின்  புதுமைப்பள்ளி விருதை பெற்ற இத்தொடக்கப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கலையரங்கம், காணொலிக்காட்சி அறை,  4 டி தொழில் நுட்பத்தில் விலங்குகள்,  பறவைகளின் ஓசைகள் மற்றும் செயல்பாடுகளைக் கற்பித்தல்,  பள்ளிக்கு வெளியிலிருந்து கொண்டே மாணவர்களைக் கண்காணிப்பதற்காக பெற்றோர்,  ஆசிரியர்களுக்கு எனத் தனியாக செல்லிடப்பேசி செயலி,  தனி வலைதளம்,  இணையம் வாயிலாகவே தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்குதல்,  ஆங்கிலத்தில் சரளமாக மாணவர்களைப் பேச வைக்கும் பயிற்சி-  இப்படியாக இப்பள்ளியில் உள்ள வசதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
  பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் கணினி மயமாக்கப்பட்டு கியூ.ஆர்.கோடு மூலம் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்துப் பாடங்களும் கற்றுத்தரப்படுகிறது.
  மாணவர்களின் எதிர்காலக் கனவு என்ன என்பதைக் கேட்டு அவர்கள் பெயருடன் மனோகரன் ஐ.ஏ.எஸ்,   டாக்டர் நந்தினி,  கல்வி அமைச்சர் கண்ணதாசன்,  விஞ்ஞானி செல்வக்குமார் என ஒவ்வொருவரின் கனவையும் தினமும் வருகைப்பதிவின் போது  அவர்களது பெயருடன் இணைத்து ஆசிரியர் அழைக்க மாணவர்களும்  உள்ளேன் அய்யா என்கிறார்கள். இது தினசரி நடைமுறை.
  சின்ன வயதிலிருந்தே ஒவ்வொரு மாணவரையும் இவ்வாறு ஊக்கப்படுத்தினால் அவர்களின் தன்னம்பிக்கை உணர்வு அதிகமாகி  எதிர்காலத்தில் அப்படியே ஆகிவிடுவார்கள் என்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.குமார்.
   இப்பள்ளியில் உள்ள வசதிகள், பாடங்களைக் கற்பிக்கும் முறை, மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் திறமை, தியாக உணர்வுடன் ஆசிரியர்கள் பணியாற்றும் விதத்தால் கவரப்பட்ட சுற்றுவட்டார கிராமத்தினர் தனியார் பள்ளிகளில் படித்து வந்த தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் கொண்டு  வந்து  சேர்ப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இப்பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து தலைமை ஆசிரியர் சி.குமார் கூறியது:
   எங்கள் பள்ளியில் அமைச்சர்கள், அதிகாரிகள் பட்டியல் என இரு வருகைப்பதிவேடுகள் உள்ளன. அப்பட்டியல்படியே மாணவர்களை அழைத்து வருகைப்பதிவேடு கணக்கிடப்படுகிறது.
   அனைத்துப் பாடங்களும் விடியோ வடிவிலும்,ஆங்கில எழுத்துகள் ஓசையின் அடிப்படையிலும் 4 டி தொழில் நுட்பத்தில் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் புரிந்து படிக்கின்றனர்.
   காணொலிக்காட்சி மூலம் அகன்ற திரையில் அன்றாட முக்கிய நிகழ்வுகளைக் காட்டி விளக்கம் தருகிறோம். விண்வெளிக்கு இஸ்ரோ ராக்கெட் அனுப்புதல்,  கோள்களின் செயல்பாடுகள், பூமியின் வரலாறு உள்பட பலவற்றையும்  நேரடியாகவே மாணவர்கள் பார்ப்பது போலவே இருக்கும்.
  கியூ.ஆர். கோடை பயன்படுத்தி அரசுப் பள்ளிகளில் இப்போது பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் நாங்கள் ஓராண்டுக்கு முன்பே எங்கள் பள்ளியில் செயல்படுத்தி வருகிறோம்.
   ஒவ்வொரு மாணவருக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கியிருக்கிறோம். இதன் மூலம் வீட்டிலிருக்கும்  பெற்றோர்கள் அவர்களது  குழந்தைகளின் மதிப்பெண்களையும், வீட்டுப் பாடங்களையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ளலாம். எங்கள் பள்ளிக்கு என தனியாக ஒரு  செல்லிடப்பேசி செயலியும்,வலைதளமும் உள்ளது.
   இதன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள்,  மதிப்பெண்கள்,  வருகைப்பதிவு, விடுமுறை, வீட்டுப்பாடங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே தெரிந்து கொள்ளலாம். 
  ஆசிரியர்களும் பள்ளிக்கு வெளியே இருந்தால் எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கிருந்து கொண்டே செல்லிடப்பேசி செயலி மூலம் பாடங்கள் நடத்துவார்,  வீட்டுப்பாடங்களும் கொடுப்பார்.  இணையம் வாயிலாகவே தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. புதுமைப்பள்ளி விருது அரசால் வழங்கப்பட்டபோது தந்த ஒரு லட்சம் ரூபாயையும் 5 அகண்ட தொலைக்காட்சிகளை வாங்கி அதன் மூலமாகவே தற்போது பாடங்களை நடத்துகிறோம். 
  இணையவழிக் கல்வி முறை, புத்தகச் சுமை இல்லாத முப்பருவக் கல்வி முறை, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் பயிற்சியும் கற்றுத்தரப்படுவதால் ஆண்டுக்கு,ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கிறது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒவ்வொருவரும்  அவரவர் சொந்த செலவிலேயே மாணவர்களுக்குத் தேவையான  கல்வி உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
   இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அதிகபட்சம் மாதம் ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்றனர். அதிக மதிப்பெண் பெறும் சிறந்த  மாணவர்கள்  அவ்வப்போது  தேர்வு  செய்யப்பட்டு  அவர்களுக்கு  ரூ.10 முதல்  ரூ.100 வரை   ரொக்கப்பரிசை அவர்களின் வங்கிக்கணக்கிலேயே செலுத்தி விடுவோம்.
  இதுதவிர அவ்வப்போது ஒவ்வொரு மாணவருக்கும் ஏராளமான  ஊக்கப்பரிசுகளையும் வழங்குகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் ஆசிரியர்கள் செய்த செலவு மட்டும் ரூ.4 லட்சம். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் தரும் ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் தலைமை ஆசிரியர் சி.குமார்.

  கடந்த ஆண்டு  அரசின்  புதுமைப்பள்ளி விருதை பெற்ற இத்தொடக்கப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கலையரங்கம், காணொலிக்காட்சி அறை,  4டி தொழில் நுட்பத்தில் விலங்குகள், 
  பறவைகளின் ஓசைகள், செயல்பாடுகளை கற்பித்தல்,  பள்ளிக்கு வெளியிலிருந்து கொண்டே மாணவர்களைக் கண்காணிப்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களுக்கு எனத் தனியாக செல்லிடப்பேசி செயலி,  தனி வலைதளம்,  இணையம் வாயிலாகவே தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழங்குதல்,  ஆங்கிலத்தில் சரளமாக மாணவர்களைப் பேச வைக்கும் பயிற்சி - இப்படியாக இப்பள்ளியில் உள்ள வசதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

   

  1. கணினி மற்றும் ஒலிபெருக்கி மூலம் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்.
  2. அமைச்சரவைப் பட்டியலுடன் கூடிய வருகைப் பதிவேடு.
  3. காணொலிக் காட்சி வாயிலாக பாடம் கற்பித்தல்.
  4. திருப்புட்குழி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai