சுடச்சுட

  

  பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாக்கும் தாய்ப்பால் வங்கித் திட்டம்

  By DIN  |   Published on : 12th September 2019 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  child

  காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனை மையத்தில் உள்ள பச்சிளங் குழந்தைக்கு வங்கியிலிருந்த தாய்ப்பாலை வழங்கும் செவிலியர்.


  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கித் திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 152 பச்சிளங் குழந்தைகளும், 210 தாய்மார்களும் பலனடைந்துள்ளனர்.
  தமிழக அரசு பெண்களுக்கென தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு 8 கிராம் தங்கம், நிதியுதவி வழங்கும் திட்டம், மகப்பேறு நிதி உதவித் திட்டம், மகப்பேறு விடுப்பு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் பலனடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மற்றொரு திட்டமான தாய்ப்பால் வங்கித் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  போதுமான அளவு தாய்ப்பால் இல்லாத பெண்களின் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இத்திட்டம்  தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து பெண்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வந்த நிலையிலும் கடந்த 4 ஆண்டுகளில் 152 குழந்தைகளும், 210 தாய்மார்களும் பலனடைந்திருப்பதாக அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஆர்.கல்பனா தெரிவித்துள்ளார்.
  இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறியது:
  எனக்கு பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது உடல் ரீதியாக சில பிரச்னைகள் இருந்ததால் உடனடியாக எனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்ற கவலையுடன் இருந்த நேரத்தில் இத்திட்டம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மருத்துவர்களே குழந்தைக்கு தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது நானும் என் குழந்தையும் நலமாக இருக்கிறோம் என்றார்.
  இத்திட்டம் குறித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஆர்.கல்பனா கூறியது:
  பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த இயற்கை உணவு. குழந்தைகளின் உடல் சீரான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தாய்ப்பால் தான் அடிப்படையாகும். 
  பெண்கள் குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் உள்ள தாய்ப்பாலை வங்கியில் சேமிக்க பெண்களுக்கு கலந்தாய்வு மூலம் அறிவுறுத்துகிறோம். அதன்மூலம் தாய்ப்பால் வங்கியில் போதுமான அளவு சேமித்து வைத்து அதை தேவைப்படும் பிற குழந்தைகளுக்குக் கொடுத்து உதவுகிறோம். 
  கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி திம்மசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெனார்த்தனன் மனைவி திவ்யா (22) இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி உயிரிழந்தார். நிறைமாத கர்ப்பிணியான திவ்யா பலத்த காயமடைந்து காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, சுயநினைவின்றி இருந்தார். ஆனால், அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை எடுத்தோம். 
  அரசு மருத்துவர்கள் ரம்யா, ராஜ்குமார், அருண்பிரசாத் ஆகியோர் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தனர். தாய் இறந்து விட்டாலும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது. 
  ஒரு மாதம் தாய்ப்பால் வங்கி மூலம் தொடர்ந்து அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கி அதை தந்தையிடம் ஒப்படைத்தோம். 
  இத்திட்டத்தின் மூலம் 152 பச்சிளங்குழந்தைளும், 210 தாய்மார்களும் பலனடைந்துள்ளனர். குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களிடம் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai