சுடச்சுட

  
  fire1


  சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்து நாசமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
  தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாலை வகுப்புகள் முடிந்த பின்னர் தேனாம்பேட்டை மார்க்கமாக செல்லும் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஓட்டுநர் நாகப்பன் பேருந்தை இயக்கினார். பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில் எதிரில் ஜி.எஸ்.டி.சாலையில் பேருந்து மாலை 4 மணி அளவில் சென்று கொண்டு இருந்தபோது, பேருந்தின் முன்பக்கம்  திடீரென  புகை வந்தது. உடன் ஓட்டுநர்  பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பேருந்தினுள் இருந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு  கீழே இறங்கி ஓடினர்.
  அடுத்த விநாடி பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது.
  மாணவர்கள் உடனே சாலையோரம் கிடந்த மண்ணை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர்.அதற்குள் பேருந்து மளமளவென தீப்பற்றி எரிந்து, முற்றிலும் நாசம் அடைந்தது.  சில மாணவர்கள் பதற்றத்தில் பேருந்தில் புத்தகப் பைகளை விட்டுவிட்டு இறங்கி ஓடியதால் புத்தகப்பைகள் அனைத்தும் எரிந்தன.
  தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓட்டேரி காவல் நிலைய போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீவிபத்து காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai