சுடச்சுட

  
  bus


  காஞ்சிபுரத்தில் விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு உரிய காலத்திற்குள் நஷ்டஈடு வழங்காததால் அரசுப்பேருந்தை நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்றப் பணியாளர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்துள்ளனர்.
  காஞ்சிபுரம் அருகே கீழம்பியைச் சேர்ந்த சம்பத் மகன் தினேஷ் (32).இவர் காஞ்சிபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில்  தனது சொந்த ஊரான  கீழம்பிக்கு சென்று கொண்டிருந்த போது ஒலிமுகம்மது பேட்டை அருகே எதிரில் வந்த  அரசுப் பேருந்து இவர் மீது மோதியது.
  இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த தினேஷ் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தார். கடந்த 2015 -ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம்  உயிரிழந்த  தினேஷின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.29,98,802 வழங்குமாறு உத்தரவிட்டது.
  நீதிமன்ற உத்தரவின்படி இத்தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்தாமல் தாமதப்படுத்திக் கொண்டே இருந்ததால் இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கருணாநிதி,  வட்டி ரூ.1,09,502 சேர்த்து மொத்தம் ரூ.31,08,304 செலுத்துமாறு உத்தரவிட்டார்.மேலும் அரசுப்பேருந்து ஒன்றை ஜப்தி செய்யுமாறும் உத்தரவிட்டதையடுத்து நீதிமன்றப் பணியாளர்கள் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வேலூர் செல்லும் அரசுப்பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். 
  திருவள்ளூரில்... 
  திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினத்தின் மகன் மணிகண்டன் (19). இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது ஈக்காடு அருகே திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து மோதியது. இதில், மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்கு நீதிமன்றம் எண் 1-இல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விபத்து வழக்கில் ரூ. 10.04 லட்சம் இழப்பீடு வழங்க மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 2018-இல் அப்போதைய நீதிபதி பரிமளா தீர்ப்பு வழங்கினார். 
    ஆனால் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், மாநகரப் போக்குவரத்து நிர்வாகம் பயனாளிக்கு இழப்பீடு தொகையை வழங்கவில்லையாம். இதைத் தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 101 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2-ஆம் தேதி தற்போதைய நீதிபதி ராம.பார்த்திபன் உத்தரவிட்டார். 
  இதையடுத்தும், மாநகரப் போக்குவரத்து நிர்வாகம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது. இதன் அடிப்படையில், திருவள்ளூர் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த அரசுப் பேருந்திலிருந்து பயணிகளை இறக்கிவிட்டு, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai