ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தியான மண்டபம்  : ஆளுநர் திறந்து வைத்தார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை திறந்து வைத்தார். 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கிய சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கிய சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார்


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புதிதாக கட்டப்பட்ட தியான மண்டபத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை திறந்து வைத்தார். 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பக்தர்கள் தியானம் செய்து மனநலம், உடல் நலம் பேணும் வகையில், பங்காரு அடிகளார் வழிகாட்டுதலின்படி, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் புதிய தியான மண்டபத்தை கட்டியிருந்தனர். 
அதன் திறப்பு விழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜைகள் மற்றும் மங்கல இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அம்மன் சிலை தங்கக் கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 11.30 மணிக்கு சித்தர் பீடத்துக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சித்தர்பீடம் சார்பாக பூரண கும்ப மரியாதை
அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அம்மனுக்கு ஆராதனை செய்து வழிபட்டார்.  இதையடுத்து, சித்தர்பீட வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தியான மண்டபத்தை ஆளுநர் திறந்து வைத்து,  மண்டபத்தின் தரைத் தளத்தில் அமைக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு காட்சிக் கூடம், மையப் பகுதியில் மகாமேரு, தளத்தின் மேற்கூரையில்  27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் மூன்று சக்கரங்களுக்குள் காட்சியளித்தல் ஆகியவற்றைப் பார்வையிட்டார். 
நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர் ஏ.கே.வெங்கிடசாமி வரவேற்றார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பாக ஆளுநருக்கு நினைவுப்பரிசை பங்காரு அடிகளார் வழங்கினார். 
விழாவில் ஆளுநர் பேசியது: 
பங்காரு அடிகளாரின் 50 வருட ஆன்மிக வாழ்க்கையை, சமுதாயத்துக்கு தொண்டாற்றி வருகின்ற நிலையை பாராட்டி, பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது சிறப்புக்குரியது.  அவர் இந்த சமுதாயத்துக்கு கல்வி, மருத்துவ, ஆன்மிகப் பணிகளை ஆற்றி வருகிறார். ஜாதி, மத பேதமின்றி, பெண்கள் அனைவரும் கருவறைக்குச் சென்று அவர்களே வழிபாடு செய்வது போற்றுதலுக்குரியது.  ஆன்மிக சேவை மட்டுமின்றி, அவர் 1,000 படுக்கை வசதிகளைக் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைத்துள்ளார். 
பக்தர்களுக்கு மன அமைதி, மன உறுதி அளிக்கும் வகையில் தியான மண்டபம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
இந்நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், இயக்க அறங்காவலர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப செந்தில்குமார்,  ஸ்ரீதேவிரேமேஷ், உமாதேவி, ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பல் மருத்துவமனை தாளாளர் மருத்துவர் டி.ரமேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளர்  ஸ்ரீலேகா செந்தில்குமார், மருத்துவர்கள் அ.மதுமலர், கே.பிரசன்ன வெங்கடேஷ், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க மாணவரணி செயலர் அ.அகத்தியன், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் கே.அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
ஆன்மிக இயக்க இணைச் செயலர் சுரேந்திரநாத் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேல்மருவத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட தியான மண்டபம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com