Enable Javscript for better performance
தொடர்மழையால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்- Dinamani

சுடச்சுட

    

    தொடர்மழையால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்

    By DIN  |   Published on : 14th September 2019 04:45 AM  |   அ+அ அ-   |    |  

    flood


    காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கி நிற்பதுடன் கழிவுநீரும் கலந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    காஞ்சிபுரத்தில் கடந்த இரு  தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக காஞ்சிபுரம் நகரில் செவிலிமேடு, மாமல்லன் நகர், நத்தம்பேட்டை, திருக்காலிமேடு, ரயில்வே சாலை, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. 
    வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியிலும், மாமல்லன் நகரிலும் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்திருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையளவைப் பொருத்தவரை (மில்லி மீட்டரில்) தாம்பரத்தில் 6.20, ஸ்ரீபெரும்புதூர்-6.80, வாலாஜாபாத்-10.50, உத்தரமேரூர்-11, காஞ்சிபுரம் 56 மி.மீஅளவிலும் மழை பெய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகக்குறைவான மழையளவாக தாம்பரத்தில் 6.20, அதிக அளவாக காஞ்சிபுரத்தில் 56 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
    இதுகுறித்து, காஞ்சிபுரம் ஓரிக்கை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.செல்வம் கூறியது:
    கடந்த இரு தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியிலேயே மழைநீரும்,கழிவுநீரும் கலந்து குளம் போல காணப்படுகிறது.
    வெள்ளிக்கிழமை காலையில் பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்  ஒருவர் கீழே விழுந்து பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டது.
    கழிவுநீரும் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.முழங்கால் அளவு  தேங்கியுள்ள  நீரில் தான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டியிருக்கிறது. 
    இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை.
    குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்வாரப்படாமல் இருந்து வருவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
     

    kattana sevai