காஞ்சிபுரம் அருகே : 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படைவீரரின் உருவம் பொறித்த நடுகல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே : 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படைவீரரின் உருவம் பொறித்த நடுகல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீசங்கரா பல்கலைக்கழக தமிழ்த்துறையில் பணியாற்றி வரும் அ.அமுல்ராஜ், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார். 

அப்போது அவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று இருப்பதை வெள்ளிக்கிழமை கண்டறிந்தார்.
இது குறித்து அவர் கூறியது: 

தமிழக வரலாற்றில் கோயிலில் தொண்டு செய்வோருக்காக பல்வேறு ஊர்களை "அகரம்' என்ற பெயரில் இறையிலி நிலங்களாகப் பிற்காலச் சோழர்கள் வழங்கியுள்ளனர். இறையிலி நிலங்கள் என்பவை வரி விலக்கு அளிக்கபட்ட பகுதிகளாகும். 

அக்கிராமங்களில் இருந்து சோழர் காலத்தில் வரி வசூல் செய்யப்படவில்லை. அதேபோல் கோவிந்தவாடி அகரம் கிராமமும் சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஊராகும்.  

அதன் அடையாளமாக, இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒரு நடுகல் காணப்படுகிறது. மாரியம்மன் கோயில் கருவறைக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் வலது புறச் சுவற்றில் நடுகல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டில் உள்ள இந்நடுகல் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

 இந்நடுகல்லில் படைவீரன் ஒருவன் இடது கையில் வில்லைத் தாங்கியுள்ளான். அவனது வலது கையில் உள்ள  அம்பு வில்லில் பூட்டப்பட்டுள்ளது. தலையில் நேராக நீண்ட கொண்டையும், முகத்தில் பெரிய மீசையும் உள்ளது. 
வலது தோள்பட்டையின் பின்புறம் அம்புகளை செருகி வைக்கும் "அம்புக்கூடு' காணப்படுகிறது. 

வலது கையில் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையுடன், கால்கள் இரண்டும் இடது புறம் நோக்கித் திரும்பிய நிலையில் காணப்படுகின்றன. 

இந்த அடையாளங்கள் யாவும் வீரனுக்குரியவையாகும்.  எனவே, இந்நடுகல் வீரன் ஒருவனுக்காக எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. போர்க் களத்தில் வீர மரணம் அடைந்த வீரன் ஒருவனுக்காக இந்த நடுகல் மைக்கப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com