Enable Javscript for better performance
தீயணைப்புத் துறையில் சேர்ந்தோருக்கு மலையேற்றப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    தீயணைப்புத் துறையில் சேர்ந்தோருக்கு மலையேற்றப் பயிற்சி

    By DIN  |   Published on : 26th September 2019 12:35 AM  |   அ+அ அ-   |    |  

    rescue

    தீயணைப்புத் துறையில் புதிதாக பணியில் சேர்ந்த 80 பேருக்கு மலைப்பட்டு மலைப்பகுதியில் புதன்கிழமை மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது.
    தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் தீயணைப்புப் பணிக்கு தமிழகம் முழுவதும் சுமார் 220 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 192 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 79 பேருக்கு தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறை மாநில பயிற்சி மையத்திலும், 113 பேருக்கு திருநெல்வேலியிலும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தீயணைப்பு மாநில பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருவோருக்கு மலைப்பட்டு பகுதியில் மலையேற்றம் மற்றும் மலை இறக்க பயிற்சி முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. 
    மாநில பயிற்சி மைய மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், பணியில் சேர்ந்தோருக்கு சுமார் 200 அடி உயரம் உள்ள மலையில் கயிறு மூலம் ஏறுவது மற்றும் இறங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலையேற்ற பயிற்சியாளர் மைக்கேல் பயிற்சி அளித்தார். இதில், தீயணைப்புத் துறை பயிற்சியாளர் சாமிநாதன், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட உதவி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    இதுகுறித்து பயிற்சியாளர் சாமிநாதன் கூறுகையில், தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்துள்ள வீரர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
    தீயணைப்புத் துறை இயக்குநர் சி.கே.காந்திராஜன் உத்தரவின்பேரில் சானடோரியம் பகுதியில் உள்ள தீயணைப்புத் துறை மாநில பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் 79 பேருக்கும் மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. 
    முன்னதாக முட்டுக்காடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படகில் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.

    kattana sevai