நுளம்ப மன்னர் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே  நுளம்ப மன்னர் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நுளம்ப மன்னர் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே  நுளம்ப மன்னர் காலத்து நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி,காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது, திருப்பத்தூரிலிருந்து சிங்காரப்பேட்டைக்குச் செல்லும் சாலையில் ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதியில் அங்குந்தி சுனை உள்ளது.

இந்தச் சுனைக்கு அருகில் வேடியப்பன் சிலை உள்ளது. இச்சிலையை ஆராய்ச்சி செய்யும்போது இந்நடுகல் கல்வெட்டு கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நுளம்பர் காலப் பழைமையான நடுகல் என்பது கண்டறியப்பட்டது.

இந்தச் சிலை 2 அடி உயரமும்,3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் உள்ளது. கல்லில் உள்ள வீரனின் கையில் வில்லும், அம்பும் உள்ளன. எதிர் திசையில் மான் ஒன்று முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு வீரனோடு சண்டையிடுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சிற்பம் மானோடு போரிட்டு உயிர்விட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுக்கல்லாக இருக்கலாம். தமிழகம் முழுவதிலும் பல இடங்களில் புலிக்குத்திப்பட்டான் நடுகல், குதிரைக் குத்திப்பட்டான் நடுகல், பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் போன்றவை கிடைத்துள்ளன.

ஆனால் மானோடு சண்டையிட்டு உயிர்விட்ட நடுகல் இதுவரை கிடைத்ததில்லை. எனவே இது அரிய வகை நடுகல்லாகும்.

அங்குந்தி சுனை ஜவ்வாது மலையில் இருந்து வரும் மலை அருவி நீராகும். இப்பகுதியில் ஏராளமான மான்கள் இருந்திருக்கும். மான் வேட்டைக்காகச் சென்ற வீரனுக்கும், மானுக்கும் இடையே நடைபெற்ற போரில் வீரன் மரணம் அடைந்திருக்க வேண்டும்.

மேலும், பல்லவர் கால இறுதியில் நுளம்ப அரசர்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்துள்ளனர். நுளம்பர்கள் பல்லவ மன்னர்களின்கீழ் சிற்றரசர்களாக ஆட்சிப் புரிந்துள்ளனர். இக்கல்வெட்டு வாசகம் கீழ்க்கண்டவாறு உள்ளது.

ஸ்வஸ்திஸ்ரீ நுளம்பன் மகந்
சிவமாறன் திளரிய களமுடைய 
மொ(டை)யயின் மகந் துட்டம்பநக்கு 
தம்பிமம் ஸ்ரீசயந் செய்வித்தாந்
சாத்தந் தவந்றி
சிரிய கொட்டி
ன கல்

இக்கல்வெட்டில் நுளம்ப மன்னர்களில் ஒருவரான சிவமாறன் என்னும் மன்னன் பெயர் இடம் பெற்றுள்ளது. நுளம்ப மன்னர்களைப் பற்றிய குறிப்பு ஏலகிரிமலை கல்வெட்டு ஒன்றிலும் கண்டறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவமாறன் காலத்தில் மொடையன் என்பவருடைய மகன் துட்டம்பன் என்பவர் போரில் வீரமரணம் அடைந்த காரணத்தினால் ஸ்ரீசயன் என்பவர் இந்நடுகல்லை எடுத்துள்ளது வெளிப்படுகிறது.

நடுகல்லில் உள்ள மான் பற்றிய எந்த குறிப்பும் இல்லை. ஆனால் மானோடு ஏற்பட்ட போரிலே துட்டம்பன் என்பவர் இறந்திருக்க வேண்டும்.

இக்கல்வெட்டை வாலாஜாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வாசித்தார். இக்கல்வெட்டு மேலும் ஆய்வுக்கு உரியது. இந்த ஆய்வின்போது ஆசிரியர்கள் சத்தியராஜ் மற்றும் லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com