மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

முன்னோர்கள் மரணமடைந்த நட்சத்திர நாளில்  அதற்கான  வழிபாடு  செய்ய இயலாதவர்கள் புரட்டாசி  மாத  மஹாளய  அமாவாசையில்  தர்ப்பணம்  செய்து  வழிபட்டால்  அதற்கான  பலனைப்   பெறலாம்  என்பது  ஐதீகம். 

இதன்  காரணமாக  புரட்டாசி  மாத  2-ஆவது சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினமாக இருந்ததால் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

பின்னர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மூலவர் கச்சபேஸ்வரரை தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வெளியில் நின்றிருந்த பசுக்களுக்கு அகத்திக்கீரை, வாழைப்பம் ஆகியனவற்றையும் வாங்கிக் கொடுத்து பசுவை வழிபட்டனர். 

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

செங்கல்பட்டில்...

செங்கல்பட்டை அடுத்த நென்மேலி லட்சுமி நாராயணன் கோயில் குளத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

நென்மேலி லட்சுமி நாராயணன் கோயில் பித்ருக்கள் வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுகிறது. 

இதனால் சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் நென்மேலி லட்சுமி நாராயணர் கோயிலில் சனிக்கிழமை அதிகாலையில் வந்து குவிந்தனர். கார்கள், இருசக்கரவாகனங்கள், ஆட்டோக்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. 

காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை 20-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கும் பணியில்  ஈடுபட்டனர். 

ஏராளமான பக்தர்கள் பல மணிநேரம் வரிசையில்  காத்திருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை சம்பத் பட்டாச்சாரியார் செய்திருந்தார். 

இதேபோன்று, மாமல்லபுரம் கடற்கரையிலும், தலசயனப்பெருமாள் கோயில் புண்டரீக புஷ்கரணி திருக்குளத்திலும், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சங்கு தீர்த்தக்குளத்திலும், செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில் திருக்குளம், திருப்போரூர் கந்தசாமி கோயில் சரவணப் பொய்கை திருக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஹாளய அமாவாசையையொட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில்...

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மஹாளய அமாவாசையான சனிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று வேத விற்பன்னர்கள் முன்னிலையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மதுராந்தகத்தில்...

மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் குளக்கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சனிக்கிழமை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com