தமிழகத்தை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்: அமைச்சர்கள் மலர் தூவி வரவேற்பு

ஆந்திர மாநிலத்திலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் சனிக்கிழமை தமிழக எல்லையை வந்தடைந்தது. இதனை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்.
கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் உள்ளிட்டோர்.
கிருஷ்ணா நதி நீரை மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் உள்ளிட்டோர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் சனிக்கிழமை தமிழக எல்லையை வந்தடைந்தது. இதனை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்.
சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர். கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் இந்த தண்ணீர் பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆந்திர அரசும், தமிழக அரசும் இணைந்து தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ், செய்து கொண்ட நதிநீர் பங்கீட்டுத் திட்டத்தின்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 12 டிஎம்சி என்ற அளவில், அதாவது ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜூலை மாதம் தண்ணீர் வழங்கப்படாததால், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிடுமாறு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஸ்ரீசைலம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது சோமசீலா அணையில் சேமிக்கப்பட்டு பின்னர், கண்டலேறு அணையை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து 25-ஆம் தேதி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 
இந்த தண்ணீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தை (ஜீரோ பாயிண்ட்) சனிக்கிழமை வந்தடைந்தது. அப்போது கிருஷ்ணா நதி நீரை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார், செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர்.  
பொதுவாக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தண்ணீர் வந்தடைய 5 முதல் 7 நாள்கள் வரை ஆகும். ஆனால் மழை காரணமாக ஆந்திரத்திலும், கால்வாயின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தண்ணீர் வரத்து இருந்ததால் எதிர்பார்த்த நாள்களுக்கு முன்னரே தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com