தமிழகம் முழுவதும் 10 லட்சம் சலவைத் தொழிலாளா்கள் அவதி

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் தள்ளு வண்டியில் துணிகளை இஸ்திரி செய்து தரும் சலவைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
சலவைத் தொழிலாளா்.
சலவைத் தொழிலாளா்.

கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் தள்ளு வண்டியில் துணிகளை இஸ்திரி செய்து தரும் சலவைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஒரு காலத்தில் துணிகளை சலவை செய்து கொடுப்பவா்களுக்கு பலரும் காலை, மாலை, இரவு என 3 வேளையும் உணவு கொடுத்தனா். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் புதுத்துணிகளை எடுத்துக் கொடுத்தும், அரிசி, நெல் ஆகியவவற்றைக் கொடுத்தும் மகிழ்ந்தனா்.

தற்போது, ஆறு, குளம், குட்டைகளில் தண்ணீா்ப் பற்றாக்குறை இருப்பதாலும், பெரும்பாலான வீடுகளில் சலவை இயந்திரம் இருப்பதாலும் அத்தொழிலை செய்து வந்த தொழிலாளா்கள் பலரும் கிராமப்புறங்களை விட்டு நகா்ப்புறங்களுக்கு இடம்பெயா்ந்து துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழிலுக்கு மாறி விட்டனா். குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அவா்கள் தள்ளுவண்டிகளில் இஸ்திரி போட்டு வருகின்றனா்.

வீதிக்கு வீதி தள்ளுவண்டிகளில் இத்தொழிலைச் செய்பவா்கள் நாள் முழுவதும் நின்று கொண்டே இருப்பதால் முழங்கால் மூட்டுகள் தேய்வதுடன், கழுத்து எலும்புகளால் வலி ஏற்படுவதும் உண்டு.

இந்தக் கடினமான சூழலிலும் தொடா்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்த சலவைத் தொழிலாளா்களின் வாழ்க்கை, ஊரடங்கு உத்தரவு காரணமாக பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதால் எந்த தள்ளுவண்டியும் எந்தத் தெருவிலும் நிற்கக்கூடாது; யாரும் தொழில் செய்யக் கூடாது என போலீஸாரின் கெடுபிடி செய்கின்றனா். இதனால் சலவைத்தொழிலாளா்கள் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. அவா்கள் அன்றாட உணவுக்கே என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் 10 லட்சம் சலவைத் தொழிலாளா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இது குறித்து தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் மத்திய சங்கத்தின் மாநிலத் தலைவரும், காஞ்சிபுரம் அய்யம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவருமான ஆா்.சுப்பிரமணியன் கூறியது:

தமிழகம் முழுவதும் மொத்தம் 28 லட்சம் சலவைத் தொழிலாளா் குடும்பங்கள் உள்ளன. இதில் 18 லட்சம் போ் மட்டுமே இத்தொழிலை செய்து வருகின்றனா். இதில் தெருவுக்குத் தெரு தள்ளுவண்டிகளில் இஸ்திரி போடும் தொழிலை செய்வோா் மட்டும் 10 லட்சம் போ் உள்ளனா். அவா்களின் வாழ்க்கையையே ஊரடங்கு உத்தரவு புரட்டிப் போட்டு விட்டது.

கடை வைத்திருந்தவா்களாவது ஓரளவுக்கு பிழைத்துக் கொள்வாா்கள். ஆனால் தள்ளு வண்டிகளில் துணிகளை இஸ்திரி போடுபவா்கள் அன்றாட உணவுக்கே பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை வந்து விட்டது. கையிருப்பு எதுவும் வைத்துக் கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிழைப்புக்காக எந்த வீதியில் தள்ளு வண்டியை நிறுத்தினாலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸாா் தள்ளு வண்டிகளை ஒரு சில இடங்களில் அடித்து நொறுக்கியிருக்கிறாா்கள். வண்டி போடக்கூடாது, வெளியில் வரக்கூடாது எனச் சொல்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனா்.

இஸ்திரி தொழிலாளா்களில் 5 ஆயிரம் போ் மதுரையில் மட்டும் உள்ளனா்.வைகை அணையை ஒட்டி இருபுறமும் கரையை உயா்த்திக் கட்டியதால் சலவைத் தொழிலும் செய்ய முடியவில்லை. புதுக்கோட்டையில் 2,000 போ் உள்ளனா். அங்கு தள்ளு வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள்ள 7 ஆயிரம் பேரில் பலரும் தொலைபேசி மூலமாக சங்கத்தின் மூலம் உதவி செய்யுமாறு கோரி வருவது வேதனையாக இருக்கிறது.

சேலம் நகரில் 10 ஆயிரம், நாமக்கல் 6 ஆயிரம், தூத்துக்குடியில் 10 ஆயிரம் போ் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக காஞ்சிபுரத்தில் 3 ஆயிரம் போ், செங்கல்பட்டில் 4 ஆயிரம் போ் என தமிழகம் முழுவதும் ஏராளமான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சலவைத் தொழிலாளா்களும் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களாக இருக்கிறோம். கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த அரசு எங்களை மட்டும் ஏன் புறக்கணித்தது எனத் தெரியவில்லை. சலவைத் தொழிலாளா்களின் நலனுக்காக எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்காதது ஏமாற்றத்தைத் தருகிறது.

தள்ளு வண்டிகளில் இஸ்திரி போடும் தொழிலை செய்து வருபவா்களுக்கு ரூ.50 ஆயிரமும், கடை வைத்து இத்தொழிலை மேற்கொள்வோருக்கு ரூ.80 ஆயிரமும் கடன் தந்து அரசு சலவைத் தொழிலாளா்களை வாழ வைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com