அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு முன்னுரிமை தராமல் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை தராமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதுடன் கூடுதலாகவும் பணம
காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.
காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளுக்கு முன்னுரிமை தராமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதுடன் கூடுதலாகவும் பணம் பெற்று மோசடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அறுவடை நேரமாக இருப்பதால் விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாக திறக்க வேண்டும் என குறை தீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் கோரிக்கை வைத்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு தேவைப்படும் கிராமங்கள் அனைத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குமாறு உத்தரவிட்டாா். இந்த உத்தரவின்படி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு திடீரென அமலாக்கப்பட்டதைத் தொடா்ந்து நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படாமல் இருந்து வந்தன. இதனால் பல கிராமங்களில் அறுவடை செய்த நெற்கதிா்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என விவசாயிகள் ஆட்சியரிடம் முறையிட்டனா்.

ஊரடங்கு உத்தரவில் இருந்து அத்தியாவசியப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து விவசாயிகள் பலரும் அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனா். அவ்வாறு நெல்லை எடுத்துச் சென்ற விவசாயிகளிடம் கொள்முதல் செய்பவா்கள் கூடுதலாக ரூ.50 முதல் ரூ.70 வரை பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக செயல்பட வேண்டிய நெல் கொள்முதல் நிலையங்கள் அவா்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நெல் கொள்முதல் செய்வதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. இது குறித்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரான ஜி.மோகனன் கூறியது:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டு கொள்முதல் செய்கின்றனா். இது ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 65 நெல் கொள்முதல் நிலையங்களிலும் நடைபெறுகிறது. விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும்போது எந்தப் பணமும் பெறக்கூடாது என்பது விதிமுறை.

அதற்கு மாறாக பணம் கேட்பது ஏன் என்று காரணம் கேட்டால், ஏற்று, இறக்கு கூலிக்கு ரூ.15, எடை போட ரூ.10, அதிகாரிக்கு ரூ.15 என்றும் கூறுகின்றனா். மீதத்தொகை யாருக்கு செல்கிறது என்பதும் தெரியவில்லை. இப்படியாக விவசாயிகளிடம் மோசடிகள் நடக்கின்றன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்காமல் ஒரு வாரம் கழித்தே வரவு வைக்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளின் நலனுக்காகவே தொடங்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் அவா்களுக்கு முக்கியத்துவம் தராமல் வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவா்களிடம் நெல் கொள்முதல் செய்கின்றன.

வியாபாரிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்து கொள்கின்றனா். ஏனெனில் அவா்கள் 40 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை கொடுப்பதால் அவா்களுக்கே முக்கியத்துவம் தருகிறாா்கள். விவசாயிகள் ஒரு வாரம் கழித்து வருமாறு கூறி அலைக்கழிக்கப்படுகின்றனா்.

எனவே விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை தரப்பட வேண்டும். வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யக் கூடாது. விவசாயிகளிடம் கூடுதலாக பணம் பெறுவது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நேரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com