அயோத்தியில் ராமர் கோயில்: பல ஆண்டுக்கால கனவு நிறைவேறுகிறது - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அயோத்தியில் ராமர்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுக்கால கனவு சோதனைகள் பல கடந்தும், சாதனைகள் பல நிகழ்த்தியும் நிறைவேறி இருப்பதாக
அயோத்தியில் ராமர் கோயில்: பல ஆண்டுக்கால கனவு நிறைவேறுகிறது -  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அயோத்தியில் ராமர்கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுக்கால கனவு சோதனைகள் பல கடந்தும், சாதனைகள் பல நிகழ்த்தியும் நிறைவேறி இருப்பதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திங்கள்கிழமை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இதுகுறித்து அவர் மேலும் கூறியது, ராமபிரான் அவதரித்த இடத்தில் கோயில் கட்டும் முயற்சி 1958இல் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் 1980 முதல் தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 1986ல் அயோத்தியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு தரிசனம் செய்தார். அப்போது இரு சாமரங்களும், அலங்காரக்குடை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 29.7.1989 ஆம் ஆண்டு கோயில் கட்டுவதற்காக காஞ்சி மடத்திலிருந்து பூமி பூஜை செய்வதற்காக செங்கற்களும் அனுப்பி வைக்கப்பட்டன. 1986 முதல் 2020 வரை பலவித சோதனைகளைக் கடந்தும், சாதனைகள் படைத்தும் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நீதிமன்றம், தொல்லியல்துறையின் சான்றுகள் மூலமாகவும் தீர்வு காணப்பட்டு அதன் பிறகே பூமிபூஜை நடக்கிறது.

ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த காலத்திலிருந்தே இம்முயற்சி தொடங்கி இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் போது பூமிபூஜை நடக்கிறது. ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கோயில் கட்ட பல முயற்சிகளை மேற்கொண்டே இருந்தார். அயோத்திக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் பலவும் உள்ளன. தமிழகத்தில் பல ஊர்களின் பெயர்களும், பழமையான கோயில்களும் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. பொன்மான் வேய்ந்த நல்லூர், திருப்புட்குழி, இருள்நீக்கி, வடூவூர் உள்பட பலவும் ராமாயணத்தோடு தொடர்புடையனவாகும். சீதாதேவியிடம் ராமேசுவரத்தின் பெருமைகளை விளக்கி இருக்கிறார் ராமபிரான். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ராமபிரான் தங்கியிருந்த தர்ப்பசயன சேத்திரமும் உள்ளது.

தியாகம், பக்தி, சேவை, வீரம், விவேகம், வளர்ச்சி இவை ஏற்பட முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் ராமபிரான். நாட்டின் கௌரவம், ஒற்றுமை, புனிதத்தன்மை ஆகியன வளர்ந்திட வேண்டும். தேசபக்தியும், தெய்வ பக்தியும் வளர வேண்டும். ராமருக்கு ஆஞ்சநேயர் உதவியது போல ராமர்கோயில் கட்டும் புனிதப்பணியில் பக்தர்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் அவரவர்களது இருப்பிடங்களில் இருந்து கொண்டே பூமிபூஜை நடக்கும் அதே நேரத்தில் 108 முறை ராமமந்திரத்தை ஜெபித்து பூமிபூஜையில் கலந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் ராமபிரானின் அருளாசியை பெற நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது.

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருநாளான ஆகஸ்ட்- 5ஆம் தேதி புதன்கிழமை அதே நாளில் அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் கட்டும் பணி நடைபெறுவதும் ஒரு அதிர்ஷ்டமேயாகும். இது ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ராமபக்திக்கு சிறந்த உதாரணமாகவும் அமைந்து விட்டது. ராமர் கோயில் கட்டுவதற்காக காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து புனிதமண், பூஜைப் பொருள்கள், தங்கம், வெள்ளிக்காசுகள், பட்டுத்துணிகள், ராமமந்திரம் எழுதப்பட்ட வெள்ளித்தட்டு ஆகிய அனைத்தும் விமானம் மூலம் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதன் மூலம் மக்களின் பல ஆண்டுக்கால கனவு நிறைவேறி இருக்கிறது.

ஜயேந்திரரின் விருப்பங்களில் ஒன்று அயோத்தியில் ராமர் அவதரித்த இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், மற்றொன்று கோமாதாவை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com