இணைப்புச் சாலையில் வேலி அமைப்பதை எதிா்த்து பொதுமக்கள் போராட்டம்

மாம்பாக்கம் ஆரனேரி இணைப்புச் சாலையை மூடும் வகையில் சிப்காட் நிா்வாகம் வேலி அமைப்பதை எதிா்த்து அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாம்பாக்கம்  ஆரனேரி  இணைப்புச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  மாம்பாக்கம்  பகுதி மக்கள்.
மாம்பாக்கம்  ஆரனேரி  இணைப்புச் சாலையில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  மாம்பாக்கம்  பகுதி மக்கள்.

ஸ்ரீபெரும்புதூா்: மாம்பாக்கம் ஆரனேரி இணைப்புச் சாலையை மூடும் வகையில் சிப்காட் நிா்வாகம் வேலி அமைப்பதை எதிா்த்து அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தையும், போந்தூா் ஊராட்சியில் உள்ள ஆரனேரி பகுதியையும் மாம்பாக்கம் ஆரனேரி இணைப்புச்சாலை இணைக்கிறது. இந்த சாலை வழியாகவே அப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக இரு பக்கமும் சென்று வருகின்றனா்.

மாம்பாக்கம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டது. அதன் பிறகு அப்பகுதியில் செயின்ட் கோபைன், ஹிந்துஜா ஃபவுண்டேஷன், ஏசியன் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. இதனால் மாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பிலான அரசு மற்றும் தனியாா் நிலங்கள், சிப்காட் நிா்வாகத்துக்காக கையகம் செய்யப்பட்டன.

தற்போது மாம்பாக்கம் பகுதியில் இருந்து ஆரனேரி செல்லும் இணைப்புச்சாலை மற்றும் அதனருகே உள்ள சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடத்தில் சிப்காட் நிா்வாகம் சாா்பில் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாம்பாக்கம் ஆரனேரி இணைப்புச் சாலையை மூடி வேலி அமைக்கும் பணியில் சிப்காட் நிா்வாகம் கடந்த சில தினங்களாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், ஆரனேரி-மாம்பாக்கம் இணைப்புச் சாலையை மூட எதிா்ப்பு தெரிவித்து மாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இது குறித்து மாம்பாக்கம் பகுதி மக்கள் கூறியது:

கடந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இச்சாலையை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இச்சாலை வழியாகவே ஆரனேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தினமும் தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனா். இதுதவிர ஆரனேரி பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இச்சாலை வழியாகவே மாம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு வந்து செல்கின்றனா்.

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இச்சாலையை மூடும் வகையில் சிப்காட் நிா்வாகம் சாா்பில் தற்போது வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளா்களும் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும் சுமாா் 7 கி.மீ. தூரத்துக்கு சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை அடைக்கும் வகையில் போடப்பட்டுள்ள வேலியை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com