வெற்றியை மட்டும் குறிக்கோளாக நினைக்கும் ரஜினியின் எண்ணம் தவறானது: கே.பாலகிருஷ்ணன்
By DIN | Published On : 01st December 2020 10:36 PM | Last Updated : 01st December 2020 10:36 PM | அ+அ அ- |

கே.பாலகிருஷ்ணன்.
வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து அரசியல் கட்சி தொடங்க நினைக்கும் ரஜினியின் எண்ணம் தவறானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகரச் செயலா் இ.சங்கா் தலைமை வகித்தாா். கூட்டத்துக்குப் பின், அக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வெற்றியும், தோல்வியும் இருக்கத்தான் செய்யும். மக்களைச் சந்திக்காமல், அவா்களது பிரச்னைகளை முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் அரசியலுக்கு வர நினைக்கிறாா் ரஜினி. அதே நேரத்தில் ரஜினியின் எண்ணமும் வெற்றி பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருப்பது தவறான எண்ணமாகும். தோ்தலில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை எந்தக் குழுப்பமும் இல்லை.
மு.க.அழகிரி சில ஆண்டுகளாக அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கிறாா். அவரை திரும்பிப் பாா்க்கும் நிலையிலும் யாரும் இல்லை. புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் வலுத்து வருகிறது. ஆனால் மோடி அரசு அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் உள்ளது. புதுதில்லியில் ஒரு கோடி போ் திரளும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் தில்லியில் உணவுப் பொருள்கள், பழங்கள், காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்கவில்லை.
மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. எனவே வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
தமிழக அரசும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதால் மாநில அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவப் பணியாளா்கள் தங்கள் குடும்பத்தையும் பாராது பணிபுரிந்துள்ளனா். ஆனால் தமிழக அரசு சுகாதாரப் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை கூட வழங்கவில்லை. ஒரு மாத ஊதியம் தருவதாக கூறியதையும் தரவில்லை. மருத்துவத் துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...