போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் சாலைகள்வாகன ஓட்டிகள் அவதி

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள சாலைகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் பள்ளங்கள் ஏற்பட்டு, சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
வாகனங்கள்  செல்ல  முடியாத  அளவுக்கு பயனற்ற நிலையில் உள்ள  இருங்காட்டுக்கோட்டை  சிப்காட்  சாலை.
வாகனங்கள்  செல்ல  முடியாத  அளவுக்கு பயனற்ற நிலையில் உள்ள  இருங்காட்டுக்கோட்டை  சிப்காட்  சாலை.

ஸ்ரீபெரும்புதூா்: இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள சாலைகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் பள்ளங்கள் ஏற்பட்டு, சேறும் சகதியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் காா் உற்பத்தி, மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்ட இந்த சிப்காட் தொழிற்பூங்காவானது தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடா்ந்து, இருங்காட்டுக்கோட்டை அருகே உள்ள கீவளூா், காட்டரம்பாக்கம், தண்டலம் ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்கா திகழ்கிறது.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பல ஆயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இத்தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைக் கொண்டு செல்லவும், மூலப் பொருள்களை கொண்டு வரவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து இருங்காட்டுக்கோட்டைக்கு தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், தொழிற்சாலைகளின் பேருந்துகள், வேன்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் முழுவதும் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், தொழிலாளா்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே பழுதடைந்துள்ள இச்சாலைகளை சீரமைக்க சிப்காட் நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com