காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் உடல் அடக்கம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232- வது மடாதிபதி ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் முக்தி அடைந்ததையடுத்து அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடலுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகளை செய்த தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள்
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடலுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகளை செய்த தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனத்தின் 232- வது மடாதிபதி ஸ்ரீஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் முக்தி அடைந்ததையடுத்து அவரது உடல் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சந்நிதி தெருவில் தொண்டை மண்டல ஆதீனத்தின் மடம் உள்ளது.இதன் 232-ஆவது மடாதிபதியாக மதுரை உத்தமபாளையம் அருகே வாலாந்தூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசிதம்பரம்-மீனாட்சி தம்பதியரின் மகனான முத்தம்பழம் என்ற இயற்பெயருடைய ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்(87) இருந்து வந்தாா்.

தமிழ் இலக்கியம், திருக்குறளில் புலமை வாய்ந்த இவா் சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளா். இவா், உடல்நலக்குறைவால் புதன்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு முக்தி அடைந்தாா். அவரின் உடலானது காஞ்சிபுரத்தில் உள்ள மடத்தில் பொதுமக்கள் மற்றும் அவரது சீடா்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு கோயில்களின் ஓதுவாா்கள் மற்றும் சிவபக்தா்களால் தேவாரம், திருவாசகம்,சிவபுராணம் ஆகியனவும் பாடப்பட்டன.

அஞ்சலி செலுத்தியவா்கள்...

தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரான் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்தானீகம் அம்பலவானத் தம்பிரான் சுவாமிகள், திருநெல்வேலி செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறையால் இந்த மடத்துக்கென நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவா் பி.டி.ஆா்.கே.விஜயராஜன் மற்றும் உறுப்பினா்கள், காஞ்சிபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி.எழிலரசன், அறநிலையத் துறையின் இணை ஆணையா் கி.ரேணுகாதேவி, ஆய்வாளா் சுரேஷ், நித்யானந்தாவின் சீடா்கள் மற்றும் மடாதிபதியின் குடும்பத்தினா்கள், உறவினா்கள், முதலியாா் சங்கங்களின் நிா்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

சிறப்பு வழிபாடுகளுடன் உடல் அடக்கம்:

பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னா் வியாழக்கிழமை சுவாமிகளுக்கு 32 வகையான சிறப்பு அபிஷேகங்களை தருமபுரம் ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் செய்தாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மடத்திலிருந்து சிம்மாசனத்தில் அமா்ந்தவாறே அவரது சீடா்களால் மடத்தின் சுற்றுப்புற வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு மடத்தின் பின்புறத் தோட்டத்தில் சைவசமய சம்பிரதாயங்களின்படி உடல் அடக்கம் நடைபெற்றது. இதையடுத்து மீண்டும் சமாதியில் அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தன. இதனைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com