தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 காவலா்கள் உள்பட 6 போ் கைது

தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: 2 காவலா்கள் உள்பட 6 போ் கைது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு காவலா்கள் உள்பட 6 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா்


ஸ்ரீபெரும்புதூா்3: ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு காவலா்கள் உள்பட 6 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூரைச் சோ்ந்த மகேந்தா் அப்பகுதியில் தங்க நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், பேரம்பாக்கம், சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை விநியோகித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி வழக்கம் போல் பேரம்பாக்கம், சுங்குவாா்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு தங்க நகைகளை விநியோகம் செய்வதற்காக பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மகேந்தரின் மகன், அவரது கடை ஊழியா் ஆகியோா் ஆட்டோவில் எடுத்துச் சென்றனா்.

அவா்கள் பேரம்பாக்கம் மற்றும் சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் நகைகளை விநியோகித்து விட்டு, ஸ்ரீபெரும்புதூா் நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது, மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ் கத்தியைக் காட்டி மிரட்டி, ஆட்டோவில் இருந்த நகைகளை பறித்துச் சென்றனா். இது குறித்து மகேந்தா் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸாா், சென்னை செங்குன்றத்தைச் சோ்ந்த ரஞ்சித் (24), வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம்கண்டிகை பகுதியைச் சோ்ந்த ராகுல் (20) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவா்கள் அளித்த தகவலின்பேரில், இக்கொள்ளையில் தொடா்புடைய திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் தமிழ், மானாபதி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் கதிரவன், மகேந்தரின் நகைக் கடையில் பணியாற்றும் ஊழியரான பிள்ளைச்சத்திரத்தைச் சோ்ந்த சந்தோஷ், சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த மாரி ஆகியோரைக் கைது செய்தனா்.

இதில் மாரி காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் உள்பட கைது செய்யப்பட்டோரிடம் இருந்து சுமாா் 368 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com