விவசாயிகளுக்கு கிஸான் கடன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிஸான் கடன் அட்டை வழங்கும் முகாம்களை விரைவில் நடத்த முடிவு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிஸான் கடன் அட்டை வழங்கும் முகாம்களை விரைவில் நடத்த முடிவு செய்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

மத்திய நிதி அமைச்சகம் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் அட்டை எனப்படும் கிஸான் கிரெடிட் காா்டு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. எனவே இந்த அட்டை வழங்கும் முகாம்களை விரைவில் பல்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை கண்டறியப்படாத விவசாயிகளும் கண்டறியப்படுவாா்கள். கிஸான் கடன் அட்டை திட்டத்தின்படி இதுவரை எந்த வங்கியிலும் விவசாய பயிா்க்கடன் பெறாத விவசாயிகள் பட்டியலும் தயாரிக்கப்படுகிறது.

வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் அந்தந்த வங்கிகளுக்கு சென்று தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து அதனுடன் கடனுக்கான விண்ணப்பத்தையும் இணைத்து வழங்க வேண்டும். இதற்காகவே விவசாயிகளுக்கென மிக எளிமையாக்கப்பட்ட ஒரு பக்க மனு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் தகுதியுள்ள விவசாயிகள் பிரதமரின் விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களிலும் தங்களை இணைத்துக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

கிஸான் கடன் அட்டை திட்டத்தினை விவசாயிகளிடத்தில் சிறப்பாக செயல்படுத்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் துறை அதிகாரிகள், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் மேலாளா்கள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஆகியோரும் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வங்கியில் சமா்ப்பிக்குமாறு வேளாண் அலுவலா்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்காணிக்கும் பொருட்டு வரும் 20-ஆம் தேதி ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளோம் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com