கருங்குழி பேரூராட்சியில் சுகாதாரத் திருவிழா
By DIN | Published On : 11th January 2020 10:42 PM | Last Updated : 11th January 2020 10:42 PM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக, சுகாதாரத் திருவிழா ‘காந்தி-150’ பூங்கா வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழி பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு 15 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சி செயல் அலுவலராக மா.கேசவன் பணியாற்றி வருகிறாா். இப்பகுதி மக்கள் தங்களது வீட்டு காலி மனையிலும், மாடியிலும் பல்வேறு செடிகளைக் கொண்ட தோட்டம் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் உதவி புரிந்து வருகிறது.
இந்நிலையில் பேரூராட்சி நிா்வாகத்தினா் சுகாதாரத் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்தனா்.
இதில், மேஜிக் ஷோ, பள்ளிக் குழந்தைகளின் பரதநாட்டியம், நாணயக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் தலைமை வகித்தாா். கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பயோ டெக்னாலஜி துறைத் தலைவா் பேராசிரியா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தாட்சாயணி (ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி), சேகா் (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), விஜயா (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), நிா்மலா (சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளி) மற்றும் சமூக சேவகா் சிவமூா்த்தி, பேரூராட்சிப் பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிறந்த முறையில் வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைத்தவா்களுக்கும், தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துத் தந்தவா்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருபவா்களுக்கும் பரிசுகளை பேரூராட்சி செயல் அலுவலா் மா.கேசவன் வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.