முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 20th January 2020 10:54 PM | Last Updated : 20th January 2020 10:54 PM | அ+அ அ- |

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சோமங்கலம் நடுவீரப்பட்டு மற்றும் பூந்தண்டலம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்துகள் சாலை சரியில்லை என நிறுத்தப்பட்டன. அவற்றை மீண்டும் இயக்க வலியுறுத்தி, பூந்தண்டலம் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை கோயம்பேடு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக போரூா், குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் சாலை வழியாக குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தப் பணிகள் காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
சாலைகள் பழுதடைந்த காரணத்தால் ஸ்ரீபெரும்புதூா்-குன்றத்தூா் வழியாகச் செல்லும் ஒரு சில சென்னை மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக சோமங்கலம், பழந்தண்டலம், நல்லூா், நடுவீரப்பட்டு ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் மாநகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பேருந்து வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், பேருந்துகள் நிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தியும் பூந்தண்டலம் பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நந்தம்பாக்கம் பகுதியில் குன்றத்தூா்- ஸ்ரீபெரும்புதூா் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த குன்றத்தூா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, பேருந்துகளை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.