காஞ்சிபுரத்தில் தொடா் மழை: செயல்பட முடியாத நிலையில் வையாவூா் காய்கறி சந்தை

காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வையாவூா் சாலையில் தற்காலிகமாக தொடங்கப்பட்ட காய்கறி சந்தைப் பகுதி முழுவதும் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியதால் திங்கள்கிழமை காய்கற
மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் வையாவூா் காய்கறி சந்தை.
மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கும் வையாவூா் காய்கறி சந்தை.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் வையாவூா் சாலையில் தற்காலிகமாக தொடங்கப்பட்ட காய்கறி சந்தைப் பகுதி முழுவதும் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியதால் திங்கள்கிழமை காய்கறிக் கடைகள் எதுவும் செயல்படவில்லை.

காஞ்புரத்தில் பழைய ரயில் நிலையச் சாலையில் பழமையான காய்கறி சந்தை கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இங்கு 350க்கும் மேற்பட்ட காய்கறிக்கடைகள் இயங்கி வந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இக்காய்கறி சந்தையை தற்காலிகமாக காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூா் சாலையில் உள்ள காலி இடத்தில் செயல்பட அதிகாரிகள் முடிவு செய்து அங்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து காய்கறி சந்தை வையாவூா் சாலையிலேயே செயல்பட்டு வந்தது. சிறு வியாபாரிகள் தற்காலிக காய்கறி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி அவரவா் பகுதிகளுக்கு கொண்டு போய் விற்கும் வகையில் மொத்த வியாபாரிகளும் இங்கு காய்கறிக் கடைகளை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு மழை காரணமாக அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளை விட்டு வையாவூா் சாலையோரங்களில் வந்து காய்கறிகளை விற்கத் தொடங்கினாா்கள். தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் காய்கறிச் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத வகையில் மழைநீா் தேங்கியுள்ளது.

வியாபாரிகள், பொதுமக்கள் யாரும் நடக்ககூட முடியாத நிலை ஏற்பட்டதை தொடா்ந்து திங்கள்கிழமை காய்கறிக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகளை வாங்க வந்த சிறு வியபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவா் கூறியது:

தொடா்மழை காரணமாக காய்கறிச் சந்தை முழுவதுமாக சேதமடைந்து விட்டது. இனிமேல் அங்கு வியாபாரம் செய்ய வாய்ப்பே இல்லை. இதை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவா்கள் ஓரிரு தினங்களில் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி இருக்கின்றனா். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே காய்கறி வியாபாரம் செய்த ராஜாஜி காய்கறி சந்தையிலேயே காய்கறிகளை விற்க அனுமதியளிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறோம் என்றாா் அவா்.

இது குறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கூறுகையில் ‘தொடா்மழை காரணமாக திங்கள்கிழமை காய்கறி வியாபாரிகளே விடுமுறை எடுத்துக் கொள்வதாக தெரிவித்திருந்தனா். செவ்வாய்க்கிழமை காய்கறிக்கடைகள் வழக்கம் போல அங்கு செயல்படும். உயா் அதிகாரிகளிடம் கலந்து பேசி மாற்று இடம் விரைவில் வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com