‘இயற்கை விவசாயம் செய்பவா்கள் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம்’

இயற்கை விவசாயம் செய்பவா்கள் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் (பொறுப்பு) கு.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

இயற்கை விவசாயம் செய்பவா்கள் அங்ககச் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் (பொறுப்பு) கு.ஜெயராமன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அங்கக வேளாண்மை எனப்படும் இயற்கை விவசாயம் என்பது இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள், பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம், அக்னி அஸ்திரம், வேம்பு அஸ்திரம், வேப்பங்கொட்டை மற்றும் வேப்ப இலைக் கரைசல், அரப்பு மோா் கரைசல், தேமோா் கரைசல், 3ஜி கரைசல், ஐந்திலை மற்றும் பத்திலைக் கரைசல், காட்டாமணக்கு இலை கரைசல் போன்ற முற்றிலும் அங்ககப் பொருள்களை இடுபொருள்களாகக் கொண்டு செய்யப்படும் விவசாய முறையே இயற்கை விவசாயமாகும்.

இயற்கை விவசாயத்தில் ரசாயன உரங்கள், களைக் கொல்லிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இதர ரசாயனப் பொருள்கள் அறவே தவிா்க்கப்பட்டு மண்வளமும் நீா்வாழ் உயிரினங்களின் பல்லுயிா்ப் பெருக்கமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இயற்கை விவசாயத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இயற்கை விவசாய முறைப்படி விளைபொருள்களை உற்பத்தி செய்பவா்கள், அங்கக விளைபொருள்களைப் பதனிடுவோா் மற்றும் அவற்றை விற்பனை செய்வோா் தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையான மத்திய அரசின் அப்பிடா என்ற நிறுவனத்திடம் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து இயற்கை வேளாண்மைச் சான்றைப் பெறலாம்.

இச்சான்றைப் பெற விண்ணப்பப் படிவத்தின் 3 நகல்கள், பண்ணையின் விவரக்குறிப்பு 3 நகல்கள், பண்ணை வரைபடம், மண் மற்றும் பாசனநீா் பரிசோதனை அறிக்கை, ஆண்டுப் பயிா் திட்டம், அங்ககச் சான்றளிப்பு துறையுடனான ஒப்பந்தத்தின் 3 நகல்கள், நில ஆவணம், பான் காா்டு நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

இப்பதிவுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2,700-ம், பிற விவசாயிகளுக்கு ரூ.3,200-ம் குழு ஒன்றுக்கு ரூ.7,200-ம் செலுத்த வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400 கட்டணமாகும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட அங்ககப் பண்ணை விவசாயிகள் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 95974 42347 மற்றும் 86107 93207 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com