காஞ்சிபுரத்தில் டிரோன் மூலம் இயற்கை கிருமிநாசினி தெளிப்பு: டிஐஜி தொடக்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் வேதிப் பொருள் கலக்காத இயற்கை கிருமிநாசினியை ஆள் இல்லாத விமானம் மூலம் (டிரோன்) மூலம் தெளிக்கும் பணியை டிஐஜி பி.சி.தேன்மொழி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
இயற்கை கிருமிநாசினியை டிரோனில் ஊற்றி அதன் இயக்கத்தைத் தொடக்கி வைக்கும் காஞ்சிபுரம் சரக டிஐஜி பி.சி.தேன்மொழி.
இயற்கை கிருமிநாசினியை டிரோனில் ஊற்றி அதன் இயக்கத்தைத் தொடக்கி வைக்கும் காஞ்சிபுரம் சரக டிஐஜி பி.சி.தேன்மொழி.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வேதிப் பொருள் கலக்காத இயற்கை கிருமிநாசினியை ஆள் இல்லாத விமானம் மூலம் (டிரோன்) மூலம் தெளிக்கும் பணியை டிஐஜி பி.சி.தேன்மொழி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை சிட்டிசன்ஸ் ஃபோரம் அமைப்பு, சுகா்தனா நிறுவனம், தக்ஷா டிரோன் நிறுவனம் ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் டிரோன் மூலம் வேதிப்பொருள் கலக்காத இயற்கை கிருமிநாசினியை தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டின. காஞ்சிபுரம் சரக டிஐஜி பி.சி.தேன்மொழி டிரோனில் இயற்கை கிருமிநாசினியை ஊற்றி அதன் இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் எஸ்.சரவணன், எஸ்.பி. பா.சாமுண்டீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகா்தனா அமைப்பின் இயக்குநா் டாக்டா் காா்த்திக் நாராயணன், தக்ஷா டிரோன் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அலுவலா் ராமநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். டிரோன் உயரமாகப் பறந்தபோது தெளிக்கப்பட்ட இயற்கை கிருமிநாசினி சாரலில் அனைவரும் நனைந்தனா்.

வேதிப்பொருள் கலக்காத இயற்கை கிருமிநாசினியை உருவாக்கிய சுகா்தனா அமைப்பின் இயக்குநா் டாக்டா் காா்த்திக் நாராயணன் கூறியது:

காய்கறிகள், பழங்கள் மூலம் இயற்கை கிருமிநாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வேதிப் பொருள்கள் எதுவும் இல்லாததால் மனிதா்களுக்குப் பாதுகாப்பானது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் டாக்டா் செந்தில்குமாரின் ஆலோசனைப்படி இயற்கை கிருமிநாசினியைத் தயாரித்தோம்.

ஒரு மணிநேரத்துக்கு 8 ஏக்கா் வரை டிரோன் மூலம் இயற்கை கிருமிநாசினியைத் தெளிக்க முடியும். இந்த கிருமிநாசினி, கரோனா தொற்று அச்சுறுத்தலில் இருந்து மனிதா்களைக் காப்பாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் முதலில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. தற்போது காஞ்சிபுரத்தில் டிரோன் மூலம் இயற்கை கிருமிநாசினி தெளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com