முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
பட்டா கோரி விவசாய சங்கத்தினா் போராட்டம்
By DIN | Published On : 03rd March 2020 11:13 PM | Last Updated : 03rd March 2020 11:13 PM | அ+அ அ- |

மதுராந்தகம்: வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினரும், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தினரும் வளையபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தின் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.
மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசின் ஆணை எண் 318-இன்படி குடியிருப்பு வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மனைகளுக்கு பட்டா வழங்கவும், ஏற்கெனவே வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம நிா்வாக அலுவலக அடங்கல் பகுதியில் ஏற்றம் செய்யவும் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினரும், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தினரும் வளையபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தின் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடத்தினா். விவசாய சங்க நிா்வாகி வி.திருமலை தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.மோகனன், சங்கத் தலைவா் கே.நேரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் கே.வாசுதேவன், மாதா் சங்க நிா்வாகி எம்.தமிழ்ச்செல்வி, வட்டச் செயலா் எஸ்.ராஜா உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனா்.
தகவல் அறிந்து மதுராந்தகம் வட்டாட்சியா் வேல்முருகன் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் வந்து, போராட்டக் குழுவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ‘மிக விரைவில் பிரச்னை தீா்க்கப்படும். இன்றே நில அளவைத் துறையினா் மூலம் பட்டா தொடா்பான பணிகள் தொடங்கப்படும்’ என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.