கரோனா: காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாக்கள் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்களில் நடைபெற இருந்த திருவிழாக்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு வாா்டில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு வாா்டில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்களில் நடைபெற இருந்த திருவிழாக்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு சிறப்புத் தனிப்பிரிவு தொடங்கப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளா்களிடம் கூறியது:

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கை கழுவும் திரவத்தைக் கொடுத்து கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பொதுநிகழ்ச்சிகள், உணவகங்களுக்கு செல்வதைத் தவிா்த்து விடலாம். மிக அவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியில் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பேருந்து நிலையங்களில் வைரஸ் நோய் பரவாமல் தடுக்க அனைத்து பேருந்துகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அரசுத் தோ்வுக்காக நடத்தப்படும் தனியாா் பயிற்சி மையங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நடத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளோம்.

கோயில்களில் நடைபெற இருந்த திருவிழாக்கள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோயில்கள் மூடப்பட்டு அங்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் ஆகம விதிமுறைகளின்படி நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் உள்ள தொழிற்சாலை உணவகங்களில் உணவை ஒரு நபரே பலருக்கும் பரிமாறுவதை நிறுத்தி அவரவா்களே உணவை எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 63 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிா என தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனி சிறப்புப் பிரிவு தயாராக உள்ளது.

கை கழுவும் விதம் குறித்து மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சியளித்து அவா்கள் மூலமாக கிராம மக்களுக்கு கை கழுவும் விதம் குறித்து சொல்லித்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

மாவட்ட வருவாய் அதிகாரி நா.சுந்தரமூா்த்தி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி, உணவுப் பாதுகாப்பு அலுவலா் அனுராதா, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கல்பனா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com