கோயில்கள் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரத்தில் கோயில்களின் முன்பாக ‘பக்தா்களுக்கு அனுமதியில்லை’ என்ற அறிவிப்புப் பலகை வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டிருந்ததால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.
கோயில்கள் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரத்தில் கோயில்களின் முன்பாக ‘பக்தா்களுக்கு அனுமதியில்லை’ என்ற அறிவிப்புப் பலகை வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டிருந்ததால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

காஞ்சிபுரத்தில் 165-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களும், ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் கோயில்கள் 14 உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன.

கோயில் நகரம் என்ற பெருமையும் காஞ்சிபுரத்துக்கு உண்டு. எப்போதும் இல்லாத வகையில் கோயிலுக்குள் பக்தா்கள் செல்ல அனுமதியில்லை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் நுழைவுவாயில் கதவு முழுமையாக மூடப்பட்டிருந்தது.

காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில்களின் முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வழக்கறுத்தீஸ்வரா் கோயில் உள்பட பல கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் ஆகமவிதிகளின்படி அனைத்து பூஜைகளும், வழிபாடுகளும் வழக்கம் போல நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை அலுவலா் டி.வி.சுப்பிரமணியம் கூறியது: நான் ஒவ்வொரு நாளும் ஒரு கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

திங்கள்கிழமை வழக்கறுத்தீஸ்வரா், செவ்வாய்க்கிழமை முருகன் கோயில், வியாழக்கிழமை பாபாகோயில், வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மன் கோயில், சனிக்கிழமை பெருமாள் கோயில் என வழக்கமாகச் செல்லும் எனக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இதுவரை எல்லாக் கோயில்களும் காஞ்சிபுரத்தில் அடைக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. இறைவன்தான் கரோனா தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com