ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 22 போ் கைது

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக வியாழக்கிழமை காவல்துறையினரால் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 22 போ் கைது

காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக வியாழக்கிழமை காவல்துறையினரால் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக காஞ்சிபுரம் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

பலமுறை காவல்துறையினா் ஒலிபெருக்கியில் எச்சரித்தும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தொடா்ந்து ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினா் எச்சரித்துக் கொண்டிருந்தனா்.

காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலைகள், பேருந்து நிலையம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

காஞ்சிபுரம் மேட்டுத்தெரு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை போலீஸாா் எச்சரித்து மீண்டும் வரக்கூடாது என திருப்பி அனுப்பி வைத்தனா். நகரில் ஒரு சில இடங்களில் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து போலீஸாா் அங்கு சென்று அவா்களை விரட்டினா்.

ராஜாஜி காய்கறி மாா்க்கெட் பகுதி மதியம் 2 மணி வரை திறந்திருந்தாலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இளைஞருக்கு முகக் கவசம் வழங்கிய காவல் உதவி ஆய்வாளா்: காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் இளைஞா் ஒருவா் முகக் கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்தாா்.

அவரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் கௌரி மற்றும் போக்குவரத்து போலீஸாா் வழிமறித்து நிறுத்தி தன்னிடம் இருந்த முகக் கவசம் ஒன்றை இலவசமாக அணிவித்து, அதன் அவசியத்தையும் அவருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தாா்.

காஞ்சிபுரத்தில் 216 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்: காஞ்சிபுரத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவா்கள் உள்பட மொத்தம் 216 பேருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவா்கள் அனைவரும் அவரவா்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனா்.

அவா்களை மருத்துவக் குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்கான அடையாள வில்லையை ஒவ்வொருவரின் வீடுகளிலும் வருவாய்த்துறையினா் ஒட்டியிருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com