காஞ்சிபுரத்தில் இருந்து உ.பி.,க்கு கண்டெய்னர் லாரியில் செல்ல முயன்ற 57 பேர் மீட்பு

காஞ்சிபுரம் பகுதியில் இருந்து உத்தரபிரேத மாநிலத்துக்கு கண்டெய்னர் லாரியில் செல்ல முயன்ற 57 தொழிலாளர்கள் காட்பாடி அருகே சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

காஞ்சிபுரம் பகுதியில் இருந்து உத்தரபிரேத மாநிலத்துக்கு கண்டெய்னர் லாரியில் செல்ல முயன்ற 57 தொழிலாளர்கள் காட்பாடி அருகே சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமில் தனிமைப்படுத்தி காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கிருந்து வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்ல வாகன அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் இருகாட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள், ஆன்லைன் மூலம் வாகன அனுமதி சீட்டு பெறாமல் கண்டெய்னர் லாரியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக பூந்தமல்லியை சேர்ந்த கண்டெய்னர் லாரி வாடகைக்கு பேசி புதன்கிழமை மாலை கிளம்பியுள்ளனர். அந்த கண்டெய்னர் லாரி புதன்கிழமை இரவு வேலூர் மாவட்டம் ஆந்திர எல்லையான காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடிக்கு வந்தது. அப்போது, லாரியை சோதனையிட்ட காவல்துறையினர் அதில் வடமாநில தொழிலாளர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர்கள் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்த காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கரோனா அச்சம் காரணமாக கண்டெய்னர் லாரியில் மறைந்து ஊருக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அவர்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருப்பதுடன், மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, அவர்களை ஓரிரு நாட்களில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com