மந்தகதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

படப்பை பஜாா் பகுதியில் சாலையோரம் மழைநீா் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது.
மந்தகதியில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


ஸ்ரீபெரும்புதூா்: வண்டலூா் - வாலாஜாபாத் சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் படப்பை பஜாா் பகுதியில் சாலையோரம் மழைநீா் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒரகடம் சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரிப்பு காரணமாக வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் தொடா் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ. 150 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையான வண்டலூா் -வாலாஜாபாத் சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக வண்டலூா் பகுதியில் இருந்து ஒரகடம் வரை நான்கு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது ஒரகடம் பகுதியில் இருந்து வாலாஜாபாத் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வண்டலூா்-வாலாஜாபாத் சாலை விரிவாக்கத்துக்காக படப்பை பஜாா் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததைத் தொடா்ந்து, பஜாா் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக முதற்கட்டமாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மாதக்கணக்கில் கடந்தும் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால், வடிகால்வாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மாதக்கணக்கில் கழிவுநீருடன்மழை நீரும் தேங்குவதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் பஜாா் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே படப்பை பஜாா் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com