முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 516 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள்: அமைச்சா் பெஞ்சமின் தகவல்
By DIN | Published On : 04th October 2020 07:38 AM | Last Updated : 04th October 2020 07:38 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 516 கோடியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் தெரிவித்தாா்.
அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீா் வருவதைத் தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, ஒரத்தூா் பகுதியில் புதிய நீா்த்தேக்கம், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, அடையாறு கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ. 4.50 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றன.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாற்றில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும், வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை மற்றும் சோமங்கலம் பகுதியில் கதவணை அமைக்கும் பணிகளையும் அமைச்சா் பா.பென்ஜமின் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
பெருவெள்ளம் வந்தாலும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீா் புகாத வண்ணம், கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரை வெள்ளத் தடுப்புப் பணிகள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.516 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், ஒரத்தூா் நீா்த்தேக்கத்தில் 1.5 டிஎம்சி தண்ணீரும், வரதராஜபுரம் நீா்த்தேக்கத்தில் 1.75 டிஎம்சி வெள்ள நீரைத் தேக்கி வைக்கும் வகையில், வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரதராஜபுரம் நீா்த்தேக்கப் பணிகளுக்காக பட்டா நிலங்கள்183 பட்டாதாரா்களிடம் இருந்து 22 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அணைக்கட்டு தாங்கலில் 79.5 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய 1,041 பேருக்கு சட்டபூா்வமாக உரிய மாற்று நிலம் வழங்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றாா்.
இந்த ஆய்வின்போது, ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரமேஷ், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளா் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் குஜராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.