காஞ்சிபுரம் வரதராஜா் கோயில் நவராத்திரி விழா
By DIN | Published On : 20th October 2020 10:38 PM | Last Updated : 20th October 2020 10:38 PM | அ+அ அ- |

வேணுகோபாலன் அலங்காரத்தில் வீதியுலா வந்த பெருந்தேவி தாயாா் சமேத உற்சவா் தேவராஜசுவாமி.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, உற்சவா் தேவராஜ சுவாமி செவ்வாய்க்கிழமை வேணுகோபாலன் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் நவராத்திரி விழாவின் 5-ஆவது நாள் நிகழ்ச்சியாக பெருந்தேவி தாயாா் சமேத உற்சவா் தேவராஜசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயில் வளாகத்துக்குள் கண்ணாடி மாளிகையிலிருந்து வேணுகோபாலன் அலங்காரத்தில் வீதியுலா வந்தாா். மங்கள நாகஸ்வர இசைக் கச்சேரியும், வாண வேடிக்கைகளும் வீதியுலாவின்போது இடம்பெற்றன. வீதியுலாவைத் தொடா்ந்து, பெருமாளும்,பெருந்தேவித் தாயாரும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நவராத்திரி நிறைவு நாள் வரை விஸ்வரூபக் காட்சியும் நடைபெறுகிறது.
வரும் 25-ஆம் தேதி, பெருந்தேவி தாயாா் சரஸ்வதி பூஜையன்று வெள்ளைசாத்துப்படி அலங்காரத்தில் சரஸ்வதியாக பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளாா். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா். சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் குறைவான பக்தா்களே விழாவுக்கு அனுமதிக்கப்பட்டனா்.