காணாமல் போன இளைஞா் கொலை: 3 போ் கைது
By DIN | Published On : 31st October 2020 12:21 AM | Last Updated : 31st October 2020 12:21 AM | அ+அ அ- |

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
படப்பை ஆத்தனஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் பத்மினி. அவா் தனது மகன் செந்தில்குமாா்(39) என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காணவில்லை என மணிமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், செந்தில்குமாரின் மனைவி மேனகாவின் தந்தை அருணிடம் விசாரணை நடத்திநா்.
அப்போது, செந்தில்குமாரின் சொத்துகளை அபகரிக்க தனது மகள் மேனகா, அவருடன் தகாத உறவு கொண்டிருந்த சிட்லப்பாக்கம் பகுதியை சோ்ந்த ராஜேஷ்கண்ணா, அவரது நண்பா்களான அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன்(42), விழுப்புரம் மாவட்டம் சவூட்டூா் பகுதியைச் சோ்ந்த காசிநாதன்(70) ஆகியோருடன் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டது தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து, செந்தில்
குமாரை தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு அழைத்துச்சென்று கொலை செய்து புதைத்துவிட்டதை அருண் ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து, அருண், ஹரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் காட்டிய இடத்தில் இருந்து செஞ்சி வட்டாட்சியா் முன்னிலையில் செந்தில்குமாரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே, செந்தில்குமாரின் அம்மா பத்மினியை அயனாவரம் பகுதியில் கடத்திய வழக்கில் செந்தில்குமாரின் மனைவி மேனகா, ராஜேஷ்கண்ணா ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.