கோப்புப்படம்
கோப்புப்படம்

குறைந்த விலைக்கு டீசல் விற்கப்படுவதைத் தடுக்க பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

ஸ்ரீபெரும்புதூரில் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல் நேரடியாக தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், மாம்பாக்கம், பிள்ளைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களும் இயங்கி வருகின்றன.

இந்த சிப்காட் பகுதிகளில் ஹூன்டாய், ரெனால்ட்நிஸான், டைம்லர், கோமாட்சூ போன்ற கார் மற்றும் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், ராயல் என்பீல்டு, யமஹா போன்ற இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதைத்தவிர வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் ஏராளமாக இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் வட்டார பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு தினமும் வந்து செல்கின்றன. அதே போல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக நூற்றுக்கணக்கான பேருந்து, வேன் மற்றும் கார்கள் இயங்கி வருகின்றன. 

தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் எளிதாக டீசல் மற்றும் பொட்ரோல் நிரப்பிக்கொள்ள ஏதுவாக ஸ்ரீபெரும்புதூர்  சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக 15க்கும் மேற்பட்ட பெட்ரோல் டீசல் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கியதை தொடர்ந்து டீசல் விற்பனை நிலையங்களும் இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களில்  இருந்து  டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் ஆயிரக்கணக்கான  லிட்டர் டீசல்கள் நேரடியாக  தொழிற்சாலைகளுக்கே சென்று அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு குறைந்த விலையில் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.7 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த விலைக்கே டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏராளமான தொழிற்சாலை நிர்வாகங்களும் தங்களுடைய  தொழிற்சாலைகளில்  இயங்கி வரும்  வாகனங்களுக்கு தொடர்ந்து லாரிகளில் கொண்டு வரப்படும் டீசல்களையே வாங்கி வருகின்றனர். இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விற்பனையின்றி வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், “இப்பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இயங்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இப்பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் அணுமதியளித்துள்ளன.

நாங்களும் பல லட்சங்களை முதலீடு செய்து பெட்ரோல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறோம். ஆனால் கடந்த சில வாரங்களாக கிழக்கு கடற்கரைச்சாலையில் இயங்கி வரும் சில பெட்ரோல் விற்பனை நிலையங்களிலிருந்து, லாரிகள் மூலம் நேரடியாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடங்களுக்கே சென்று குறைந்த விலையில், சுமார் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் லிட்டர் டீசல் வரை தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இந்த டீசல்கள் பெரும்பாலும் மீனவர்களுக்காக அரசாங்கத்தின் மூலம் மானிய விலையில் வழங்கப்படுவதும், இந்த டீசல்கள் முறையாக மீனவர்களுக்கு வழங்காமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. எனவே ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களின் விற்பனையை சரிசெய்ய தமிழக அரசும், எண்ணெய் நிறுவனங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com