அயோத்திக்கு செல்லும் 600 கிலோ எடைகொண்ட வெங்கலமணி
By சிவ.சு.ஜெகஜோதி | Published On : 18th September 2020 04:54 PM | Last Updated : 18th September 2020 04:54 PM | அ+அ அ- |

600 கிலோ எடைகொண்ட வெங்கலமணி.
அயோத்தியில் கட்டப்படும் ராமர்கோயிலுக்கு தமிழகத்திலிருந்து 600 கிலோ எடையிலான வெங்கலமணி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகவும், இம்மாதம் 21 ஆம் தேதி காஞ்சிபுரத்திற்கு அந்த மணியை எடுத்து வரும் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவும் உள்ளது.
காஞ்சிபுரம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவர் பி.பன்னீர் செல்வம் இது குறித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தது, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நித்யபூஜைக்காக 600 கிலோ எடையில் வெங்கலமணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகாமணியை ஒரு மினிலாரியில் வைத்து யாத்திரையாக ராமேசுவரத்திலிருந்து தொடங்கி 4552 கி.மீ. அதாவது 10 மாநிலங்கள் வழியாக பயணித்து நிறைவாக அயோத்தியில் சேர்க்கப்படும்.
இந்த யாத்திரையானது இம்மாதம் 17 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து தொடங்கி வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அயோத்தியில் நிறைவு பெறுகிறது. வரும் வழியில் இம்மாதம் 21 ஆம் தேதி காலையில் சென்னைக்கும், மதியம் காஞ்சிபுரமும் வருகிறது. இதை எடுத்து வரும் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் முதலாவதாக பொன்னேரிக்கரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயில்,ஏகாம்பரநாத சுவாமி கோயில், சங்கரமடம், காமாட்சி அம்மன் கோயில், காந்தி ரோடு, வரதராஜப் பெருமாள் கோயில் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
பின்னர் தேனம்பாக்கம் பிரம்ம புரீஸ்வரர் ஆலயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது. பின்னர் இந்த யாத்திரையானது வேலூருக்கு செல்லும். இம்மணியானது இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளரான ராஜலெட்சுமி மன்தா அவர்களது பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மணி யாத்திரை வரும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடித்து வழிபாடு செய்து கொள்ளுமாறும் பி.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.