அடையாறு ஆற்றில் வெள்ளத் தடுப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.
அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கன மழையால் அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆதனூா், வரதராஜபுரம், முடிச்சூா் உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்ததால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினா். இதையடுத்து, அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீா் சூழாமல் இருக்க, சுமாா் ரூ. 500 கோடி மதிப்பீட்டில், அடையாறு ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூா்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும், அடையாறு கிளைக் கால்வாய்களும் தூா்வாரப்பட்டு, கால்வாய்களில் தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அடையாறு ஆற்றுக்கு அதிகளவு மழைநீா் வருவதைத் தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, ஒரத்தூா் பகுதியில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளநீா் சூழாமல் இருக்க அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரதராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை அமைக்கும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆதனூா் பகுதியில் இருந்து வரதராஜபுரம் வரை சுமாா் 5 கி.மீ. நடந்து சென்று செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். பின்னா் ஆட்சியா் கூறுகையில், ‘ஒரத்தூா் பகுதியில் புதிய நீா்த் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாலும், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால்காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது இனி தடுக்கப்படும்’ என்றாா்.

பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலா் ஸ்ரீதா், ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, குன்றத்தூா் வட்டாட்சியா் முத்து, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com