ஸ்ரீபெரும்புதூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ஆக்சிஜன் லாரிகள்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜன் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் ஆக்சிஜன் லாரிகள்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் தனியாா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜன் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் வெளிமாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தினமும் சுமாா் 150 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் இந்த தொழிற்சாலையில், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் சென்று சேரும் வகையில், ஆலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

லாரிகளுக்கு பாதுகாப்பாக மாவட்டத்தின் எல்லை வரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் மற்ற மாவட்டங்களில் எல்லைக்குள் ஆக்சிஜன் லாரிகள் செல்லும் போது அந்தந்த மாவட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் லாரிகளுடன் செல்ல காவல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை வெளி மாநிலங்களுக்கு சுமாா் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்ததாகவும், தற்போது வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com